என் மலர்
செய்திகள்

இரணியல் அருகே அனுமதியின்றி கருங்கல் ஏற்றிவந்த லாரி டிரைவர்-கிளீனர் கைது
இரணியல்:
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞான சிகாமணி மற்றும் போலீசார் நேற்று தோட்டியோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள்.
பின்னர் அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் எந்தவித அனுமதியும் இன்று கருங்கல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் லாரியை நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த கோமதி (வயது 38) என்பவர் ஓட்டி வந்ததும், அவருடன் கிளீனராக நெய்யூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ஜோஸ் (44) என்பவர் வந்ததும் தெரியவந்தது.
போலீசார் அவர்களை எந்தவித அனுமதியும் இன்றி கருங்கல் ஏற்றி வந்ததாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் எங்கிருந்து கருங்கல் ஏற்றி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து போலீசார் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக கண்காணித்து வருகின்றனர். அனைத்து வாகன சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.