search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் வழக்கு - முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜுக்கு சம்மன் அனுப்ப முடிவு
    X

    குட்கா ஊழல் வழக்கு - முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜுக்கு சம்மன் அனுப்ப முடிவு

    குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளது. #gutkha #cbi

    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    செங்குன்றம் குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட டைரியில் குட்கா ஊழல் குறித்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

    ஒவ்வொரு மாதமும் குட்கா விற்பனைக்காக யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது பற்றி டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மற்றும் 30 அதிகாரிகளின் பெயர் இடம் பெற்றிருந்தது.

    இந்த விவகாரம் குறித்து முதலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் குட்கா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் குட்கா வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். குட்கா குடோன் செயல்படுவது பற்றி 2016-ம் ஆண்டு சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கே முதலில் தகவல் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அப்போது துணை கமி‌ஷனராக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். குட்கா விசாரணையை செங்குன்றம் போலீசார் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாகவே குட்கா விற்பனைக்கு லஞ்சம் கைமாறப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    குட்கா குடோனில் முதலில் சோதனை மேற்கொண்டவர் என்கிற அடிப்படையில் தற்போது விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ஜெயக்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர்.

    குட்கா குடோனில் சோதனை மேற்கொண்ட போது யார்-யாரை உடன் அழைத்து சென்றீர்கள்? அங்கு என்ன நடந்தது? என்பது பற்றிய தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக போலீஸ் அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இருப்பினும் யார்-யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகாமலேயே இருந்தது. அதுபற்றி இப்போது பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே கடந்த 3 நாட்களாக சி.பி.ஐ., போலீஸ் அதிகாரிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.

     


    துணை கமி‌ஷனர் ஜெயக்குமாரின் கீழ் அப்போது இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய 5 பேரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர்களில் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்கோளாறு காரணமாக இறந்து விட்டார்.

    இதையடுத்து மற்ற 4 பேரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த 4 இன்ஸ்பெக்டர்களில் 2 பேர் உதவி கமி‌ஷனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மீதமுள்ள இருவரும் இன்ஸ்பெக்டராக பணியில் உள்ளனர். அனைவரும் சென்னையில்தான் பணியாற்றி வருகிறார்கள்.

    2 உதவி கமி‌ஷனர்களில் ஒருவரிடம் கடந்த 26-ந் தேதி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று 2 இன்ஸ்பெக்டர்களும் விசாரணைக்காக ஆஜரானார்கள். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா குடோன் சோதனையின் போது நடைபெற்றது என்ன என்பது பற்றியும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இன்று 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை தொடர்கிறது. இன்றைய விசாரணைக்கு சென்னையில் பணியாற்றி வரும் இன்னொரு உதவி கமி‌ஷனர் ஆஜரானார். அவருடன் டிரைவர் ஒருவரும் ஆஜராகியுள்ளார். இவர்களிடமும் குட்கா விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    இதன் பிறகு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. விசாரணை நடை பெறுகிறது.

    குட்கா விவகாரம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி அன்று டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.

    இதன் அடிப்படையில் குட்கா வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் அதிகாரிகள் உள்பட 6 பேர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #gutkha #cbi

    Next Story
    ×