search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோக் ஆயுக்தா தேர்வு குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    லோக் ஆயுக்தா தேர்வு குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின் கடிதம்

    ஊழல் ஒழிப்புக்கு உதவாத லோக் ஆயுக்தா தேர்வு குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். #mkstalin #LokAyukta

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் லோக் ஆயுக்தா கூட்டம் தொடர்பாக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான, பெயர் பட்டியலை தயார் செய்யும் பொருட்டு, தேடுதல் குழு ஒன்றை அமைப்பதற்காக நாளை நடைபெறும் கூட்டத்திற்கு லோக் ஆயுக்தா அமைப்பின் தேர்வுக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் சார்பில் தற்போது அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா அமைப்பிற்கு, ஊழல் புகார்கள் மீது பொதுநலனுக்குப் பயனுள்ள வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை.

    இந்த அமைப்பிற்கு, தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் முதலமைச்சர் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழு, ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    ஊழல் புகார்கள் மீது யாரும் செல்வாக்கு பிரயோகித்திட இயலாதபடி, கடுமையான நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக இருப்பதற்குப் பதில், அரசுக்கு வெறும் பரிந்துரை செய்யும் அஞ்சல் நிலையம் போன்ற அமைப்பாகவே லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படுகிறது.

    ஊழல் பற்றி தகவல் கொடுப்போருக்கு எவ்வித பாதுகாப்பும் சட்டத்தில் இல்லாததால், புகார்கள் கொடுக்கவே எவரும் அஞ்சும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழக சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா அறிமுகமான அன்றே, மிக மோசமான இத்தகைய குறைபாடுகளை எல்லாம் விரிவாக மேற்கோள் காட்டி, தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவை, தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

    அக்கோரிக்கையை சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் நிராகரித்துவிட்டு, அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட இந்த லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள விதிகள் ஏதும் ஊழல் ஒழிப்பிற்கும் உதவாது. வெளிப்படையான விசாரணை நடைமுறைக்கும் வித்திடாமல் லோக் ஆயுக்தா அமைப்பு அதிமுக அரசின் கூண்டுக்கிளி போல் ஆக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.

    அதிகாரமற்ற லோக் ஆயுக்தா அமைப்பு ஒருபுறமிருக்க, அந்த அமைப்பிற்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தலைவர் பதவியில் ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் முதல்-அமைச்சரும், அரசியல் சட்டப்படி நடுநிலையுடன் நியாயமாகச் செயல்படுவதை அறவே மறந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படும் பேரவைத்தலைவர் உறுப்பினராகவும் இடம் பெற்றுள்ள லோக் ஆயுக்தாவின் தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்பது எவ்விதத்திலும் ஊழல் ஒழிப்பிற்கு உதவாது என்பதால் நாளைய தேர்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin #LokAyukta

    Next Story
    ×