search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - வைகோ
    X

    விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - வைகோ

    விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Vaiko

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் பவர் கிரீட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து கோவை, திருப்பூர், தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில், விளைநிலங்கள் வழியாக உயர்மின் பாதை அமைக்கும் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளன.

    விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிசம்பர் 17-ந்தேதி முதல் விவசாயிகள் 8 மண்டலங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய நிலங்களில் நில உரிமையாளர்கள் அனுமதி இல்லாமல் அத்துமீறிச் சென்று செயற்கைக்கோள் மூலமாக அளவிட்டு ஆக்கிரமிப்பு செய்கின்றனர். விவசாயிகளிடமிருந்து அரசு நிலத்தை எடுக்கும் நடைமுறைகளை சிறிதும் பின்பற்றுவதில்லை. வேளாண் நிலங்களையே நம்பி இருக்கும் உழவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் இதன் காரணமாக கேள்விக்குறியாகி உள்ளது.

    மின்கோபுரம் அமைக்கும்போது விவசாய நிலம் முற்றிலும் மதிப்பிழந்து போகிறது. இழப்பீடு கொடுப்பதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை.

    தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் திருச்சூர் வரை மின்சாரம் செல்கிறது. இதில் தமிழகத்தில் உயர்மின் கோபுரங்கள் வழியாகவும் கேரள மாநிலத்தில் புதை வடக் கம்பிகள் வழியாகவும் கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழக விவசாய நிலங்கள் மூன்று லட்சம் ஏக்கருக்குமேல் பாதிக்கப்படுகிறது.

    தமிழக அரசு, இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட 400 கிலோ வாட் மின்தட பாதை திட்டத்தை சாலை ஓரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ளதைப் போல தமிழகத்திலும் பூமிக்கு அடியில் புதைவடக் கம்பிகள் வழியாக மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும்.

    டிசம்பர் 27-ந்தேதி ஈரோடு மூலக்கரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பொது மக்களும் மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தவுள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார். #Vaiko

    Next Story
    ×