search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.ஜி.பி.யிடம் போலீசார் புகார்: பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை பாயுமா?
    X

    டி.ஜி.பி.யிடம் போலீசார் புகார்: பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை பாயுமா?

    சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேல் மீது உடன் பணியாற்றிய 15 போலீசார் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று புகார் மனு அளித்தனர். #PonManickavel
    சென்னை:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்த பொன் மாணிக்கவேல் கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

    அவரை மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சிலை கடத்தல் பிரிவில் பணிபுரிவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து 60 போலீசார் ‘ஆன் டியூட்டி’ முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த பணி 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.

    இந்த நிலையில் சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருக்கு பணிகாலம் முடிந்து விட்டது. எனவே அவர்களை திருப்பி அனுப்பி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். இதில் 14 சப்- இன்ஸ்பெக்டர்கள், 4 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 21 ஏட்டுகள் இடம் பெற்றுள்ளனர்.

    மாற்றப்பட்டவர்களுக்கு பதிலாக 50 வயதுக்கு மேற்படாத சப்-இன்ஸ்பெக்டர்களையும், 40 வயதுக்கு மேற்படாத ஏட்டுகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பணி நியமனம் செய்ய கோரி தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதி உள்ளார்.

    திருப்பி அனுப்பப்பட்ட 60 பேரும், ஏற்கனவே பணியாற்றிய வேலையில் மீண்டும் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய குழுவை அமைக்கும் முயற்சியில் பொன் மாணிக்கவேல் தீவிரமாக உள்ளார்.

    இந்த நிலையில் சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர் இங்ஸ்லிதேவ், ஆனந்த், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட 15 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர்.


    இது தொடர்பாக டி.ஜி.பி. ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல், சட்டத்துக்கு முரணாக வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் வற்புறுத்துகிறார். அவரது உத்தரவை கடைபிடிக்காத போலீஸ் அதிகாரிகளை மிரட்டியும், திட்டியும் வருகிறார்.

    இதனால் தங்களுக்கு பணிமாறுதல் வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் ஒரு கூடுதல் சூப்பிரண்டு, ஒரு துணை சூப்பிரண்டு, 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஏட்டு ஆகியோர் புகார் மனு கொடுத்து உள்ளனர். இந்த மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து டி.ஜி.பி. அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும், டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்களை பொன் மாணிக்கவேல் திருப்பி அனுப்ப முடியாது. இதுபோன்ற அயல் பணிகளில் 150 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 பேரை திருப்பி அனுப்ப முடியாது. அவர்களை திருப்பி அனுப்பவும் வேறு போலீஸ் அதிகாரிகளை நியமிக்கவும் டி.ஜி.பி.க்குதான் அதிகாரம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொன் மாணிக்கவேல் பதவியை ஐகோர்ட்டு நீடித்துள்ளது. எனவே அரசும், காவல் துறையும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோர்ட்டில்தான் முறையிட முடியும்.

    எனவே பொன் மாணிக்கவேல் மீது குறிப்பிட்ட சில போலீசார் புகார் கொடுத்தது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோர்ட்டு மூலமே அணுக வேண்டும். எனவே அவர் மீது உடனடி யாக நடவடிக்கை பாயுமா? என்பது சந்தேகமே. #PonManickavel
    Next Story
    ×