search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே 8 வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் கறுப்புகொடி போராட்டம்
    X

    சேலம் அருகே 8 வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் கறுப்புகொடி போராட்டம்

    சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புகொடி போராட்டம் நடத்தினர். #chennaisalemexpressway

    சேலம்:

    சேலம்- சென்னை இடையே ரூ.10ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் முதற்கட்ட அளவீடு பணி நடந்தது.

    அப்போது விவசாயிகள், பொதுமக்கள், தங்கள் நிலங்களை சாலைக்கு எடுக்கக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.

    இதையடுத்து ஐகோர்ட்டு நிலம் கையகப்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதித்தது. இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி விவசாயிகளிடம் கருத்துக்கள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சாலைக்காக கையகப்படுத்தக்கூடிய நிலங்களின் விவரத்தை சர்வே எண்ணுடன் அரசு வெளியிட்டது. இதற்கு பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    இந்த சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8- வழிச்சாலை அமைக்க நிலம் கொடுப்போரில் 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து விட்டனர். 11 சதவீத பேர் மட்டுமே எதிர்க்கின்றனர். அவர்களின் நிலத்திற்கும் உரிய இழப்பீட்டை வழங்கி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்,’ என்று தெரிவித்தார்.

    முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து, சேலம் பூலாவரியில் நேற்று மாலை பாதிக்கப்படும் விவசாயிகள் கறுப்பு கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    ராமசாமி என்பவரது தோட்டத்தில் திரண்ட விவசாயிகள், தென்னை மரங்களிலும், வருவாய்த்துறையினரால் நடப்பட்ட நில எடுப்பு எல்லை கற்களிலும் கறுப்பு கொடியை கட்டி நில எடுப்புக்கு அனுமதிக்க மாட்டோம் என கோ‌ஷமிட்டனர்.

    8 வழிச்சாலைக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதாக கூறுவது பொய். பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் 5 மாவட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே இருக்கும் சாலையை விரிவுப்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். புதிதாக விளை நிலங்களை அழித்து சாலை அமைக்க விடமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #chennaisalemexpressway #farmersprotest

    Next Story
    ×