search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராவூரணி அருகே குடிநீர், நிவாரணப்பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    பேராவூரணி அருகே குடிநீர், நிவாரணப்பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    பேராவூரணி பகுதியில் குடிநீர் மற்றும் நிவாரணப்பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த மாதம் 15-ந்தேதி அதிகாலை கஜா புயல் வீசியதில் தென்னை மரங்கள்,வாழை மரங்கள், மா, பலா, வேப்ப மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் வயர்கள் அறுத்து விழுந்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியுற்றனர்.

    ஜெனரேட்டர் மூலம் மேல் நிலை நீர் தேக்கதொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் பேராவூரணியை அடுத்த கொரட்டூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிதண்ணீர் கிடைக்காமல் அவதியுற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலகம் ஆவுடையார் கோயில் சாலையில் கொரட்டூர் கடைத்தெருவில் பொதுமக்கள் திரண்டு சாலைமறியல் செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் அஷ்ரப் அலி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியவர்களிடம் குடிதண்ணீர் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    பேராவூரணி அருகே பழுக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் 21 குடும்பங்கள் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். கஜா புயலில் பாதிக்கப்பட்டதால் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனிப்பட்ட நபர்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கினர்.இந்நிலையில் தமிழக அரசின் 27 பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்குவதாக கிராம நிர்வாக அலுவலர் பழுக்காடு ஆதிதிராவிடர் தெருவில் கணக்கெடுத்து சென்றனர்.

    தற்போது தொகுப்பு வீடுகளுக்கு நிவாரணம் கிடையாது என்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது, இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு ரெட்ட வயல் கடைவீதியில் காலகம் ஆவுடையார்கோயில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பேராவூரணி சப்-இன்ஸ் பெக்டர் கார்த்திக்,வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் இருவரும் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்திய மக்கள் இன்னும் எங்கள் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை, அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் என கூறினர். அதிகாரிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. #tamilnews
    Next Story
    ×