search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை சொல்வதா? தமிழிசைக்கு திருநாவுக்கரசர் கண்டனம்
    X

    மேகதாது பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை சொல்வதா? தமிழிசைக்கு திருநாவுக்கரசர் கண்டனம்

    மேகதாது அணை பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை கூறிய தமிழிசைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #MekedatuDam
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி மூலம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

    ஆய்வு செய்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்தது தவறு. இதை கண்டித்து தமிழக சட்டசபையில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

    இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அங்கு போய் சோனியா சொல்ல வேண்டியதுதானே. ராகுல் சொல்ல வேண்டியது தானே என்று தமிழிசை சொல்வது சிறுபிள்ளைதனமாக உள்ளது.

    கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. முல்லை பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டதா? கர்நாடகத்தில் பா.ஜனதாவும் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்கள். எனவே, அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவார்கள்.

    இதை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசுதானே. அதை விட்டுவிட்டு கட்சிகள் மீது குறை சொல்வது விதண்டாவாதம்.

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை என்பது உண்மைதான். இப்போது பழைய கதைகளை பேசி பயன் இல்லை. எடப்பாடி அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு, மேகதாது பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை திறமையான வழக்கறிஞர்களை கொண்டு திறம்பட நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மலர் அஞ்சலி செலத்தினார்கள். ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாட்டில் துறைமுகம் பகுதி த.மா.கா. நிர்வாகி திருமலை தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் எஸ்.சி.துறை தலைவர் செல்வ பெருந்தகை, தணிகாசலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சிரஞ்சீவி, சொர்ணா சேதுராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம்பாட்சா, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகர், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பிராங்ளின் பிரகாஷ், மயிலை தரணி, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், பி.வி.தமிழ்செல்வன், ஓட்டேரி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், மலேசியா பாண்டியன், ஊட்டி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில், இன்று மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. #Thirunavukkarasar #MekedatuDam
    Next Story
    ×