search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கு- வேதாந்தா நிறுவனத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
    X

    ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கு- வேதாந்தா நிறுவனத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

    மாசு ஏற்படுத்தும் வகையில் ஆலைக்கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #Sterlite #MaduraiHCBench
    மதுரை:

    நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மீளவிட்டான் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. அந்த தொழிற்சாலை கழிவுகளை அகற்றும் போது முறையாக தெரிவிக்கப்பட வேண்டுமென்ற விதியுடன் ஆலை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம், 3.52 லட்சம் டன் மதிப்புள்ள கழிவுகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டியுள்ளனர்.

    அதே போல இதே அளவிலான கழிவுகளை தனியார் பட்டா நிலத்திலும் கொட்டி வைத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புகார் அளித்தால், மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்கள் அதில் கவனம் செலுத்த தயங்குகின்றனர்.


    ஆகவே மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது, மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் தூத்துக்குடி கலெக்டர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Sterlite #MaduraiHCBench
    Next Story
    ×