search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Deltadistrict #heavyrain
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கலாம்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 19 செ.மீ., நாகையில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் பாபநாசம், கும்பகோணம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் தலா 15 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

    தவிர காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கோவை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வரை (நேற்றுடன்) சராசரியாக 33 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 30 செ.மீ. மழையே பெய்துள்ளது. இது இயல்பை விட 9 சதவீதம் குறைவாகும். சென்னையில் 58 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 32 செ.மீ. மழையே பெய்திருக்கிறது. இது இயல்பை விட 45 சதவீதம் குறைவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Deltadistrict #heavyrain
    Next Story
    ×