search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் குண்டும் குழியுமான சாலைகளில் போராடும் வாகனங்கள்
    X

    சென்னையில் குண்டும் குழியுமான சாலைகளில் போராடும் வாகனங்கள்

    மழைக்கு பிறகு சாலைகள் மிக மோசமாக காணப்படுவதால் அவற்றை போர்க்கால அடிப்படையில் உடனே செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Rain
    சென்னை:

    சென்னை ‘பெருநகரம்’ என்ற அந்தஸ்தை பெற்றாலும் கூட சாலை தரம் இன்னும் உயர்த்தப்படவில்லை. நகரின் உட்புற சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. குண்டும் குழியுமான சாலைகளில் இரு சக்கர வாகனங்கள், கார் போன்றவை செல்லும் போது பாதிக்கப்படுகின்றன.

    மழை காலம் தொடங்கி விட்டதால் குழிகளில் நிரம்பி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் செல்லும்போது பொதுமக்கள் தடுமாறி கீழே விழுகின்ற நிலை உள்ளது.

    சாலையை துண்டித்து கேபிள் மற்றும் சாக்கடை கால்வாய் அடைப்பு போன்றவற்றை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளால் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் மழை நேரத்தில் பள்ளம் தெரியாமல் வாகனத்தோடு விழுகிறார்கள்.

    சென்னையில் 387 கிலோ மீட்டர் தூரத்திற்கு 471 போக்குவரத்து சாலைகளும் 5500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3174 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் முக்கிய ரோடுகளில் பள்ளங்கள் அதிகளவு இருக்கின்றன.

    அதனை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உடனுக்குடன் சாலைகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மழைக்கு பிறகு சாலை மிக மோசமானதாக காணப்படுகிறது. அவற்றை போர்க்கால அடிப்படையில் உடனே செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    முகப்பேர் மேற்கு, சூளைமேடு மார்க்கெட் ரோடு, பெரம்பூர் பேரக்ஸ்ரோடு, ஸ்டீபன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

    இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி கூறுகையில், மாநகராட்சி பகுதியில் போடப்படும் சாலைகள் தரமாக இருப்பதால் உடனே பாதிப்பு ஏற்படவில்லை. சாலைகளின் குறுக்கே வெட்டுவதால் ஒரு சில இடங்களில் குழிகள் ஏற்பட்டு இருக்கின்றன. 90 சதவீத சாலைகள் நன்றாக இருக்கின்றன. ஒரு சில சாலைகள் மட்டுமே சேதமடைந்து இருக்கின்றன. சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    மழைக்காலம் முடிந்தவுடன் 3 ஆயிரம் உட்புற சாலைகள் 20 போக்குவரத்து சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. ஜனவரி மாதம் 15-ந்தேதிக்கு பிறகு இந்த பணிகள் தொடங்கும் என்றார். #Rain
    Next Story
    ×