என் மலர்
செய்திகள்
கொடைக்கானலில் மீண்டும் கனமழை- சீரமைப்பு பணி முடக்கம்
கொடைக்கானல்:
கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானல் நகர், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு கொடைக்கானல்- வத்தலக்குண்டு, பழனிசாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மேல்மலை கிராமங்களுக்கும் போக்குவரத்து தொடங்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இதனால் காய் கறிகளை கிடைத்த விலைக்கு மதுரை மற்றும் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 4 வருடங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த ஆண்டு ஏற்பட்ட புயலால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
பல ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. மேலும் அழுகல் நோய் தாக்கத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கொடைக்கானல் நகர்பகுதியில் 75 சதவீதம் மின்வினியோகம் தரப்பட்டுள்ளது. மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் 2 நாட்களில் மின்வினியோகம் சீரமைக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
நேற்றிரவு சாரலாக தொடங்கிய மழை விடிய விடிய கனமழையாக நீடித்தது. இதனால் சீரமைப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மலை கிராமமக்கள் கடந்த 7 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உறவினர்களது வீடுகளுக்கு சென்று செல்போன் சார்ஜ் மற்றும் அடிப்படை தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இருந்தபோதும் மலை கிராமங்களில் இயல்புநிலை திரும்ப சில நாட்களாகும் என வேதனையுடன் தெரிவித்தனர். #gajacyclone #heavyrain