search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சிகள் தூண்டவில்லை: நிவாரணம் கிடைக்காததால் மக்கள் போராடுகிறார்கள்- தினகரன்
    X

    எதிர்க்கட்சிகள் தூண்டவில்லை: நிவாரணம் கிடைக்காததால் மக்கள் போராடுகிறார்கள்- தினகரன்

    நிவாரணம் கிடைக்காததால் தான் பொதுமக்கள் போராடுகிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தூண்டவில்லை எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK #GajaCyclone
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயலால் பேரழிவை சந்தித்துள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலும், பாதிக்கப்பட்ட கிராமங்களிலும் சந்தித்தேன்.

    கஜா புயலானது பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த போதும், குறைந்தபட்சம் பத்து நாட்களாவது முகாம்களில் மக்கள் தங்கும்படி நேரும் என்பதை முன்கூட்டியே யோசித்து முறையான திட்டமிடல் இல்லாததால், அம்முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான பால், ஜெனரேட்டர், மருத்துவ வசதி போன்ற முன்னேற்பாடுகளை இந்த அரசு செய்யத்தவறிவிட்டது என்பதை அறிய முடிந்தது.

    போதிய அளவில் நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் இருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு சுகாதார குழுவைக் கூட பார்க்க முடியவில்லை என்று எங்களிடம் மக்கள் புலம்புகின்றனர்.

    இதனிடையே, பாதிப்புகளுக்குள்ளான பகுதிகளில் இறந்துபோன கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்ய இயலாததாலும், மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தாததாலும் அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய ஆரம்பித்துள்ள இந்த சூழலை மனதில்கொண்டு தொற்று நோய் பரவாமல் தடுக்கவேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது.

    கிணற்றில் நீர் இருக்கிறது. ஆனால், அதை நீர் தொட்டிக்கு மேலேற்ற மின்சார வசதியில்லை. தனிநபர் வீடுகளில் மட்டுமல்ல, ஊர் பொது குடிநீர் தொட்டிக்கும் இதுதான் நிலைமை. இந்த வி‌ஷயத்தில் கவனம் செலுத்தவேண்டிய உள்ளாட்சித் துறையின் செயல்பாடு மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது.

    வேளாண் தொழிலையே நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்கும் டெல்டா பகுதி மக்களின் பாதிப்பை பார்வையிடவோ, மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறியவோ வேளாண்மைத்துறை மற்றும், கிராம நிர்வாக அதிகாரிகளையாவது உடனடியாக கிராமங்களுக்கு அனுப்பி கணக்கீடு பணியை விரைந்து செய்திட வருவாய்த் துறையும் முன்வரவில்லை.

    புயலின் காரணமாக இதுவரை சுமார் 90,000 மின் கம்பங்கள் சாய்ந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளதாக அரசு சொன்னது. ஆனால், 10,000-க்கும் குறைவான புதிய மின்கம்பங்களே இருப்பில் உள்ளதாக மின்துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சொல்கிறார்கள். இதை வைத்து எப்படி பாதிப்பை சரிசெய்து, மின் விநியோகத்தை சீராக்க முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.



    எனவே, வெறுமனே புள்ளி விவரங்களை மட்டுமே வெளியிடுவதை நிறுத்தி விட்டு, வருவாய், மின்சாரம், சுகாதாரம், உள்ளாட்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் என்னென்ன பாதிப்பு இருந்தது? எங்கே, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்பதை தனித்தனியாக வெளிப்படையாக ஒரு வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்படுத்தி மக்களுக்கும், எதிர்கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்த தென்னை, வாழை, கரும்பு, நெல் போன்ற பயிர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் புயலுக்கு பலியானதை அம்மக்களால் இன்னும் மறக்க முடியவில்லை. மக்கள் விரும்பாத திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் உபயோகமில்லாத பணிகளுக்கு நிதியை அள்ளி இறைக்கும் அரசு, இயற்கை பேரிடரால் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை கொடுக்க மறுக்கிறது.

    தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, அதைத் சார்ந்த கூலித் தொழிலாளிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கும் தகுந்த நிவாரணத்தை இந்த அரசு வழங்கி அவர்கள் வாழ்வை மறு சீரமைக்க வேண்டும்.



    ஒவ்வொரு புயல்வரும் போது மாநில அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று சொல்வதும்; ஆனால், மாநில அரசு கேட்கும் நிதியை உரிய நேரத்தில் தராமல் தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வஞ்சிப்பதும் மத்திய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசோடு இணக்கமாக இருந்து மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தருவதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசு ஏன் இடைகால நிவாரணம் கேட்கவில்லை?

    பசிக்கு உணவு இல்லை, உடுத்த உடை இல்லை, படுத்துறங்க வீடூ இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, இருட்டில் ஒளியேற்றிட மெழுகுவர்த்தி இல்லை, இப்படி அத்தியா வசிய பொருட்கள் எதுவும் இல்லாமல், நிம்மதியும் இல்லாமல், வாழ்வாதாரத்தை புயலுக்கு காவு கொடுத்துள்ள அப்பாவி மக்களுக்கு ஏனென்று கேட்க அரசுமில்லை என்று வெம்பி அழும் ஓலங்களே போகுமிட மெல்லாம் கேட்க முடிகின்றது.

    உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காத பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ கிராம நிர்வாக அதிகாரிகளோ புயல் பாதித்த பகுதிகளை உடனடியாக சென்று மக்களுக்கு தேவையானவற்றை அறிய தவறியதன் காரணம்தான் அவர்களை கண்டாலே மக்கள் கொதிக்கின்றனர்.



    இதனை உணராமல், எதிர்க்கட்சியினர் தூண்டி விடுவதால்தான் மக்கள் போராடுகிறார்கள் என்று வெட்டி அரசியல் செய்வதும், கேள்வி கேட்பவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியதாகும்.

    மேலும், மக்கள் விரோத அரசு என்று முத்திரை பெற்ற பின், மற்ற மாநிலங்களைப் போல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டுமென சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

    ஆகவே, இனியாவது பழனிசாமி அரசு தங்களது பொறுப்பை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆக்கபூர்வமான பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK #GajaCyclone
    Next Story
    ×