search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்- ஜிகே வாசன்
    X

    புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்- ஜிகே வாசன்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #TamilMaanilaCongress #GKvasan
    சென்னை:

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    அங்கு சுற்றுப் பயணம் செய்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னார். இன்று சென்னை திரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிகப்பேரழிவை கஜா புயல் ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க த.மா.கா. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இந்த தொகை அரசிடம் வழங்கப்படும்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார வசதி இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பெரும் கவலையில் மூழ்கியுள்ள அவர்களுக்கு இது மேலும் சுமையாக இருக்கும். எனவே இந்த மாவட்ட மக்களுக்கு இந்த மாத மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இயல்பு நிலை திரும்பும் வரை இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுகடைகளையும் மூட வேண்டும். மது கடைகள் திறந்தால் நிவாரண பணிகளுக்கு இடையூறு ஏற்படும். சீரமைப்புப் பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும்.

    புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயும், சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயும், முறிந்து போன தென்னை மரம் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாயும், சாய்ந்து போன வாழைக்கு ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கவேண்டும்.


    நெல்லுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், கரும்புக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், சேதமடைந்த, இடிந்து போன வீடுகளுக்கு குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாயும் நிவாரணமாக கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கோவை தங்கம், ஜி.ஆர். வெங்கடேஷ், டி.என். அசோகன், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர் சைதை மனோகரன், முனவர் பாட்சா ஆகியோர் உடன் இருந்தனர். #GajaCyclone #TamilMaanilaCongress #GKvasan
    Next Story
    ×