search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  ‘கஜா’ புயல் காரணமாக பலத்த காற்றுடன் விடிய, விடிய பரவலாக மழை
  X

  ‘கஜா’ புயல் காரணமாக பலத்த காற்றுடன் விடிய, விடிய பரவலாக மழை

  ‘கஜா’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. #GajaCyclone
  விழுப்புரம்:

  தமிழகத்தை மிரட்டி கொண்டிருந்த ‘கஜா’ புயல் நேற்று அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பலத்த காற்றுடனும், இடி-மின்னலுடனும் கூடிய கன மழை பெய்தது. ‘கஜா’ புயலின் தாக்கம் விழுப்புரம் மாவட்டத்திலும் இருந்தது. மாவட்டத்தின் கடலோர பகுதிகளான வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், சின்னமுதலியார்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், மற்ற இடங்களில் சாரல் மழை தூறியது.

  புயல் கரையை தொட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது இடி-மின்னலுடன் கனமழையாகவும் கொட்டித்தீர்த்தது. பின்னர் நேற்று அதிகாலை 5 மணியளவில் மழை சற்று ஓய்ந்தது. மீண்டும் 6 மணியளவில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் ½ மணி நேரமாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகும் காலை 10 மணி வரை விட்டுவிட்டு சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது.

  இந்த மழையின் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான சுதாகர் நகர், மணிநகர், கம்பன்நகர், ஆசிரியர் நகர், பாண்டியன் நகர், காந்தி நகர், சித்தேரிக்கரை, கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது.

  நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதன் காரணமாக சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த மழையின் காரணமாக மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நேற்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

  மேலும் பலத்த காற்று வீசியதன் காரணமாக ஒரு சில கிராமப்புறங்களில் மின்வயர்கள் அறுந்து மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்திரா நகர், வ.பாளையம், நன்னாடு, தோகைப்பாடி, பெரும்பாக்கம், காணை, வயலாமூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் செய்வதும் தடைபட்டது. இந்த மழையினால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் மட்டுமின்றி பள்ளிகள், கல்லூரிகள், சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள் என 1,884 நிவாரண முகாம்களை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்திருந்தது. இருந்தபோதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

  வானூர் அருகே பொம்மையார்பாளையத்தில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பகுதியளவு சேதமடைந்த 11 வீடுகளின் சுவர்கள் நேற்று அதிகாலை புயல் காரணமாகவும், கடலில் ஏற்பட்ட அலையின் சீற்றம் காரணமாகவும் இடிந்து விழுந்தது. இந்த வீடுகளில் இருந்தவர்களுக்கு ஏற்கனவே சுனாமி குடியிருப்பு வீடுகள் வழங்கப்பட்டதால் சேதமடைந்த வீடுகளில் பொதுமக்கள் யாரும் தங்காமல் காலியாகவே இருந்தது. இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை.

  கல்வராயன்மலை அருகே மொட்டையனூர் மதுரா மலையரசன்பட்டு கிராமத்தில் புளியமரம் சாய்ந்து விழுந்ததில் சின்னாண்டி, இளையராஜா ஆகியோரது வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

  அதுபோல் பொம்மையார்பாளையம் குப்பத்தில் 30 குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த மீட்பு குழுக்கள் அங்கு விரைந்து சென்று அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர்கள் விருப்பத்தின்பேரில் அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தங்கினர்.

  மேலும் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரக்காணத்தை அடுத்த கீழ்பேட்டை கிராமத்தில் இருந்த காட்டுவாகை மரம் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்ததால், கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று நடுரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து அந்த சாலையில் ½ மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதுபோல் கள்ளக்குறிச்சி- கூத்தக்குடி சாலையில் வரஞ்சரம் என்ற இடத்தில் புளிய மரமும், கடலூர்- திருக்கோவிலூர் சாலையில் சங்கராபுரத்தில் வேப்ப மரமும் வேரோடு சாய்ந்து விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜா (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். இதையடுத்து ராஜாவின் மனைவி ஜெயக்கொடி, மகன் ராஜ்குமார் ஆகியோர் நேற்று காலை 6 மணிக்கு எழுந்து, வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அப்போது மழையில் நனைந்திருந்த வீட்டின் ஒருபக்க சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜா மீது விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  கல்வராயன்மலையில் பெய்த கனமழை காரணமாக பெரியார், மேகம், கவியம் உள்ளிட்ட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு வனப்பகுதியில் உள்ள நீரோடைகளின் வழியாக வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் 33 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 37 அடியை எட்டியது. உளுந்தூர்பேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால், உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்கியது. மழை ஓய்ந்ததும் காலை 9 மணியளவில் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று வடிகால் வாய்க்காலை தூர்வாரி கழிவுநீரை வெளியேற்றினர். இதேபோல் கழிவுநீர் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக செஞ்சி பஸ் நிலைய வளாகத்தையும் மழைநீர் சூழ்ந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

  இதேபோல் திண்டிவனம், மயிலம், கூட்டேரிப்பட்டு, ஒலக்கூர், விக்கிரவாண்டி, மேல்மலையனூர், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், சங்கராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 843.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வளவனூரில் 51 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக திருவெண்ணெய்நல்லூரில் 4 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. #GajaCyclone
  Next Story
  ×