search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் காட்சி
    X
    மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் காட்சி

    திண்டுக்கல் மாவட்டத்தில் அணை-குளங்களை நிரப்பிய கஜா புயல்

    திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பியது. #GajaStorm
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜாபுயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது கன மழை பெய்தது. இதனால் பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பழனி அருகே உள்ள வரதமா நதி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மொத்த கொள்ளளவான 67.47 அடியில் 49 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.

    2 நாட்களாக பெய்த கன மழையால் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் 3 மணி நேரத்தில் அணையின் நீர் மட்டம் 17 அடி வரை எட்டி முழு கொள்ளளவை கடந்தது. இதனால் அணையை தாண்டி அதிக நீர்வரத்து ஏற்பட்டது.

    எனவே அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனால் வறட்டாறு, சண்முகா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையை ஒட்டி அமைந்த குட்டிக் கரடு பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கரையோரங்களில் இருந்த குடிசை வீடுகள் மற்றும் சிறிய கோவில்களையும் மழை நீர் சூழ்ந்தது.

    இதே போல் பாலாறு பொருந்தலாறு அணைக்கும் நீர் வரத்து திடீரென அதிகரித்தது. வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வந்ததால் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. அணையை ஒட்டி அமைந்துள்ள ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 54 அடியாக இருந்தது. கன மழை காரணமாக அணைக்கு 3,400 கன அடி நீர் வரத்து வந்ததால் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து அதன் முழு கொள்ளளவை எட்டியது.

    இதனால் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வத்தலக்குண்டு வருவாய்த்துறையினர் சார்பில் தண்டோரா அடித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    வைகை அணை நீர் மட்டம் 68 அடியில் இருந்தது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர் மட்டம் சரிந்து வந்த நிலையில் கன மழை காரணமாக மீண்டும் நீர் வரத்து அதிகரித்ததால் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் வைகை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    வைகை ஆற்று நீர் செல்லும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  #GajaStorm
    Next Story
    ×