search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதிப்பு - 12 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன
    X

    கஜா புயல் பாதிப்பு - 12 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன

    கஜா புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Gaja #MinisterThangamani
    சென்னை:

    கஜா புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்த போது நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்து விழுந்தன.

    இதுபற்றி மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கஜா புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தோம்.

    இதற்காக புயல் பாதித்த திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க இரவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

    புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. பல இடங்களில் பெரிய பெரிய மரங்கள் மின் வயர்கள் மீது விழுந்ததால் கம்பிகள் அறுந்து விழுந்து கிடக்கிறது.

    ஆயிரக்கணக்கான இடங்களில் டிரான்ஸ் பார்மர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

    தஞ்சாவூரில் 5 ஆயிரம் மின் கம்பங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் மின் கம்பங்கள் நாகை மாவட்டத்தில் 4 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது. இவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.

    பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடப்பதால் அதை அகற்றிய பிறகுதான் மின் கம்பங்களை சரி செய்ய முடிகிறது.



    தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் மின் வாரிய ஊழியர்கள் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் நேரடியாக சென்று பணிகளை பார்வையிட்டு வருகிறேன்.

    மின் வினியோகம் சீராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிகளுக்கு முதலில் மின் இணைப்பு கொடுத்து வருகிறோம். அதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எங்களிடம் போதிய மின் கம்பங்கள் இருப்பு உள்ளதால் தேவைப்படும் பகுதிகளுக்கு உடனுக்குடன் மின் கம்பங்களை அனுப்பி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் சத்ய கோபால் கூறியதாவது:-

    புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு 6 மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தது. குடிசை வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ், தகர கொட்டகை வீடுகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாமுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    மொத்தம் உள்ள 471 நிவாரண முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

    மீட்பு குழுவினர் அனைவரும் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #Gaja #MinisterThangamani
    Next Story
    ×