search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சசிகலா புஷ்பா எம்.பி.
    X
    கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சசிகலா புஷ்பா எம்.பி.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்பி தர்ணா போராட்டம்

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #SasikalaPushpa
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவிற்கு தலைவராக ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. உள்ளார்.

    இதில் கலந்து கொள்வதற்காக சசிகலா புஷ்பா எம்.பி. இன்று தூத்துக்குடிக்கு வந்தார். அவருடன் அவரது கணவர் ராமசாமியும் வந்திருந்தார். இந்நிலையில் நட்டர்ஜி எம்.பி.க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதையறிந்த சசிகலா புஷ்பா எம்.பி., தனக்கு இது பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என கூறி அங்கிருந்த வருவாய்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர் வருவாய் துறை அதிகாரி அலுவலகத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கடந்த 12-ந் தேதி எனக்கு கடிதம் வந்தது. ஆனால் இங்கு வந்தபிறகு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறினார்கள். இந்த தகவல் எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.

    தூத்துக்குடியில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசுவேன் என்பதால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து ஒரு பெண் என்றும் பாராமல் என்னை மிரட்டுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலா புஷ்பா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களை படத்தில் காணலாம்.

    இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி.யின் கணவர் ராமசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கூறி அதிகாரிகள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, திட்ட இயக்குனர் தளபதி குறித்து அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும்வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறினார். #SasikalaPushpa

    Next Story
    ×