search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாம்பலத்தில் அலைமோதும் கூட்டம்- தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானம்
    X

    மாம்பலத்தில் அலைமோதும் கூட்டம்- தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானம்

    தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானம் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். #Drone
    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு இன்றும், நாளையும் கூட்டம் அலைமோதும்.

    இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வரையில் மாம்பலம், பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் தினமும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் தி.நகரில் மக்கள் கூடும் இடங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் பாதுகாப்பு பணிகள் இன்று தொடங்கின.

    தி.நகர் பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். பொருட்களை வாங்க வரும் பொது மக்களின் உடமைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வலம் வரும் இந்த கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெரு உஸ்மான் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 750 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த விழாவில் கூடுதல் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால், தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க மாம்பலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


    தி.நகர் பஸ் நிலையம், போத்தீஸ் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் சிறிய கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கூட்டத்தில் புகுந்து திருடும் கொள்ளையர்களின் 50-க்கும் மேற்பட்ட போட்டோக்களை போலீசார் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளனர். பேஸ் டிடெக்டிவ் என்கிற கண்டு பிடிப்பு முறையில் புகைப்படத்தில் இருக்கும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை காட்டிக் கொடுக்கும் வகையிலும் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருடும் எண்ணத்தில் எந்த குற்றவாளியாவது மாம்பலம் பகுதியில் ஊடுருவினால் நிச்சயம் போலீசில் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் தப்ப முடியாது.

    தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானமும் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். இதன் மூலம் போலீசார் பணியில் இல்லாத இடங்களிலும் கூட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும்.


    தீபாவளி பாதுகாப்பில் இன்னொரு சிறப்பு ஏற்பாடாக போலீசாரின் சீருடையில் கேமரா பொருத்தி கண்காணிக்கும் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 போலீசாரின் சீருடைகளில் கேமராக்களை கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பொருத்திவிட்டார். இந்த போலீசார் பணியில் ஈடுபட்டிருக்கும்போது கேமரா இயங்கிக் கொண்டே இருக்கும். போலீசாரின் எதிரே நின்று பேசுபவர்களின் குரலும், போலீசின் குரலும் அதில் பதிவாகும்.

    ஜி.பி.எஸ். கருவியுடன் கேமரா இணைக்கப்பட்டிருப்பதால் போலீஸ்காரர் எங்கு இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் போலீசார் யாராவது தவறு செய்திருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

    இது தவிர 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 8 இடங்களில் கண்காணிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. #Drone
    Next Story
    ×