search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கரி இறக்குமதி முறைகேடு பற்றி விசாரணை நடத்தவேண்டும் - அன்புமணி ராமதாஸ்
    X

    நிலக்கரி இறக்குமதி முறைகேடு பற்றி விசாரணை நடத்தவேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    நிலக்கரி இறக்குமதி முறைகேடு பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். #AnbumaniRamadoss #CoalImport
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. ஒன்றரை நாளுக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் ரூ.33 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகவும் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, வெளி நாடுகளில் இருந்து விதிகளை தளர்த்தி நிலக்கரி இறக்குமதி செய்ததில் தான் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது.

    தமிழ்நாடு அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி மத்திய பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவிடமிருந்து ஒரு டன் ரூ.2,000 என்ற விலையில் வாங்கப்படுகிறது.

    ஆனால், இப்போது ஒரு டன் ரூ.5,098 என்ற விலையில் யாசின் இம்பெக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும், ரூ.5008 என்ற விலையில் அதானி நிறுவனத்திடமிருந்தும், ரூ.4,936 என்ற விலையில் ஸ்ரீ ராயலசீமா நிறுவனத்திடமிருந்தும் மொத்தம் 1.10 லட்சம் டன் நிலக்கரியை மின்சார வாரியம் கொள்முதல் செய்துள்ளது. இது வழக்கமாக வாங்கும் விலையை விட 150 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



    தமிழக மின் நிலையங்களுக்கு 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய செப்டம்பர் 23-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன.

    இதனால் தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவைக்கும் அதிகமாகவே நிலக்கரி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 1-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி நடைமுறையிலிருந்து விலக்கு அளித்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அவசர, அவசரமாக அதிக விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? இவ்வளவு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மின் நிலையங்களுக்கு வந்து சேர்ந்ததா? ஊழல் செய்ய வேண்டும் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இதன் பின்னணி சதி பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

    நிலக்கரி இறக்குமதியில் மட்டுமின்றி நீண்டகால, குறுகியக் கால மற்றும் மத்தியக் கால ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பதை பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன.

    இது குறித்து ஆதாரங்களுடன் பலமுறை புகார் அளித்தும் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நிலக்கரி மற்றும் மின்சாரம் கொள்முதல் உட்பட அனைத்துத் துறை ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AnbumaniRamadoss #CoalImport

    Next Story
    ×