search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முதியவர் மகனிடம் ஒப்படைப்பு - கலெக்டர் நடவடிக்கை
    X

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முதியவர் மகனிடம் ஒப்படைப்பு - கலெக்டர் நடவடிக்கை

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முதியவர் 5 ஆண்டுகள் கழித்து மகனிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் சட்டை போடாமல், லுங்கியுடன் இருந்ததை பார்த்து அவரிடம் நேரில் சென்று விசாரித்தார். மேலும் முதியவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரை அழைத்து முதியவர் குறித்து விவரங்கள் சேகரிக்க உத்தரவிட்டார்.

    முதியவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசினார். ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் எழுதியும் காண்பித்தார். அதில் அவர் பெயர் அலோசியல் பர்னபாஸ்டோபோ எனவும், அவரது சொந்த மாநிலம் ஜார்க்கண்ட் எனவும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினரை கண்டு பிடிப்பதற்காகவும், தொடர்பு கொள்வதற்காகவும் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் மூலமாக அந்த முதியவர், டேனியல் மெமோரியல் நேசம் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள முதியவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு வீடியோ அழைப்பு மூலம் முதியவர் அடையாளம் காணப்பட்டு அங்கிருந்து அவரது மகனை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் முதியவரை அவரது மகனிடம் கலெக்டர் கந்தசாமி ஒப்படைத்தார்.

    மேலும் முதியவருக்கு கலெக்டர், புதிய துணி வாங்கி கொடுத்து அதனை முதியவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

    வயது முதிர்வின் காரணமாக சில நேரங்களில் நினைவு இழந்ததால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். தனது தந்தையை கண்ட மகன் கண்கலங்கி, கலெக்டருக்கு நன்றி தெரிவித்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்து சென்றார்.

    அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா தா.டார்த்தி, நேசம் முதியோர் இல்ல பொறுப்பாளர் குளோரி ஆகியோர் உடனிருந்தனர். 
    Next Story
    ×