search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி - உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் மோதல்
    X

    ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி - உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் மோதல்

    ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உதயநிதி ஸ்டாலினும் டுவிட்டரில் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துகளை தெரிவித்துள்ளனர். #MinisterSPVelumani #UdhayanidhiStalin
    சென்னை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எல்லா அமைச்சர்களுமே ஊழல் செய்கின்றனர். இவர்கள் விரைவில் சிறைக்கு போவார்கள். அதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும்” என்று பேசினார்.

    இதற்கு பதில் அளித்து உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்க க(கு)ளத்தில் இறங்கி பார்த்து பேசுங்க தம்பி. எழுதிக்கொடுக்கறதை அப்படியே பேசறீங்களே சரிபார்க்காமல்! வாங்களேன் எங்க ஊர் குளங்களை பார்க்க. தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருக்கிறது. கோவை ஒரு முன் உதாரணம் என தமிழ்நாட்டுக்கே தெரிந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் எப்பவுமே களத்துல தான் இருக்கேன் வேலு மணிண்ணே. உங்கள் ஊழல் குளம் கோவையில் இருப்பதற்கான ஆதாரத்தை போட்டோவா போட்டிருக்கேன். தமிழ்நாட்டில் கோவையை ஊழலுக்கே முன் உதாரணமாக கொண்டு வந்தவர் நீங்கள். விரைவில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பதில் சொல்ல தயாராக இருங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் குளங்களின் இன்றைய புகைப்படங்கள் என்ற தலைப்பில் செல்வசிந்தாமணி குளம், சிங்காநல்லூர் குளம், கிருஷ்ணாம்பதி குளம், வாளாங்குளம், பெரிய குளம் மற்றும் நரசம்பதி குளம் ஆகியவற்றின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார்.  #MinisterSPVelumani #UdhayanidhiStalin
    Next Story
    ×