search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாஸ் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் - சட்ட நிபுணர்கள் கருத்து
    X

    கருணாஸ் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் - சட்ட நிபுணர்கள் கருத்து

    சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு கொடுத்திருக்கும் கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Karunas #Speaker
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாசை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதற்காக விரைவில் கருணாசுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்கக்கோரி தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கருணாஸ் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நேற்று 2 மனுக்களை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் கொடுத்தார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளதால் அவர் சார்பில் அவரது வக்கீல் அழகிரி மனுக்களை கொடுத்தார்.

    முதல் மனுவில், “சபாநாயகர் தனபால் அரசியல் சட்டப்படி செயல்படவில்லை. அவர் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான தீர்மானத்தை அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

    மற்றொரு மனுவில், “தமிழ்நாடு சட்டபேரவை விதி 68-ன்படியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 179(சி)படியும் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்கான தீர்மானம் கொண்டுவர விரும்புகிறேன். இதை பேரவை அலுவல்களில் சேர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.



    கருணாஸ் அளித்துள்ள இந்த மனுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இந்த மனுக்கள் அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சட்ட நிபுணர் ஒருவர் கூறுகையில், “ஒரு எம்.எல்.ஏ. சபாநாயகரை பதவி நீக்க கோரி தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால் கட்சி தலைமைக்கு தான் முதலில் பரிந்துரைக்க வேண்டும். அதை விடுத்து பேரவை செயலகத்தில் மனு கொடுக்க கூடாது.

    அவ்வாறு மனு அளிக்கும் பட்சத்தில் அவர் கட்சி விதிகளை மீறுவதாக அர்த்தம். அந்த அடிப்படையிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார். அதன்படி பார்த்தால் கருணாஸ் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற தனிக்கட்சியின் தலைவராக இருந்தாலும் அவர் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே சபைக்குள் அவர் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ. என்றே கருதப்படுகிறது.

    ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சபாநாயகரை பதவி நீக்க செய்யக்கோரி மனு கொடுப்பது அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்படும். எனவே இதை அடிப்படையாக வைத்து கட்சி தாவல் தடை சட்டத்தின்படி கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை மிக எளிதாக அ.தி.மு.க. தலைவர்களால் பறிக்க முடியும் என்று பெரும்பாலான சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே கருணாஸ் கொடுத்த கடிதம் அவருக்கே சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு 1972-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது சபாநாயகராக இருந்த கே.ஏ.மதியழகன் கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்தார். அதாவது எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார்.

    இதையடுத்து அவர் மீது ஆற்காடு வீராசாமி பதவி நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மூலம் சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டார்.

    தமிழக சட்டசபை வரலாற்றில் சபாநாயகரை பதவி நீக்கம் செய்தது அப்போதுதான். அதன் பிறகு எந்த சபாநாயகரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.

    கடந்த 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. அப்போதைய தி.மு.க. சபாநாயகர் ஆவுடையப்பனை பதவி நீக்க கோரி 2 தடவை தீர்மானம் கொண்டு வந்தது. அந்த 2 தீர்மானங்களும் தோல்வியை தழுவின.

    அதுபோல கடந்த ஆண்டு சபாநாயகர் தனபாலை பதவி நீக்க செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானமும் தோல்வியை தழுவியது.

    தற்போது தனபால் மீது 2-வது முறையாக பதவி நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வர மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடவை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவரே மனு கொடுத்துள்ளார். தி.மு.க. அவருக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதற்கு சட்டசபை நிகழ்வு தான் விடை தரும். #Karunas #Speaker
    Next Story
    ×