என் மலர்
செய்திகள்

திருப்பூரில் சரக்கு ஆட்டோ மோதி கணவன் கண் எதிரே மனைவி பலி
திருப்பூர்:
திருப்பூர்-காங்கேயம் ரோடு பள்ளக்காட்டுபுதூர் சோளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44). இவரது மனைவி ராதா (40). இவர் புதுக்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக விஜயகுமாரும், ராதாவும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்காடு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்டினார். பின் இருக்கையில் ராதா அமர்ந்து இருந்தார். திருப்பூர் அருகே பள்ளக்காட்டுபுதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருக்கும்போது, அந்த வழியாக தண்ணீர் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கணவனின் கண் எதிரே ராதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் ஊரக போலீசார் விரைந்து சென்று ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






