search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் அடித்துக்கொலை
    X

    நெல்லையில் ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் அடித்துக்கொலை

    நெல்லையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதில் காயம் அடைந்த 2 தொழிலாளர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    நெல்லையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதில் காயம் அடைந்த 2 தொழிலாளர்கள் அடுத்தடுத்து இறந்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    பாளை மேலப்பாளையம் வீரமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது45), கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள். இருவருமே வேறு நபர்களுடன் ஓடிவிட்டனர். இதனால் சுப்பையா அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். காவி வேட்டி அணிந்து சுற்றி திரிவாராம்.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி சுப்பையாவின் வீட்டருகே ஒருவர் இறந்து விட்டார். இதனால் அங்கு துக்கம் விசாரிக்க பலர் வந்திருந்தனர். அப்போது அங்கு நின்ற சுப்பையாவுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் சுப்பையாவை சரமாரியாக கைகளாலும், கம்பாலும் தாக்கினர்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் அங்கேயே சுற்றி திரிந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் மோசமானது. இதையடுத்து சிலர் சுப்பையாவை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சுப்பையா இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜ் மற்றும் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகராஜ், மாரியப்பன் ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்படி விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தில்வேல் (48), இவர் நெல்லையில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் திடீரென வேலையை விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சமீபத்தில் நெல்லை வந்த அவர் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். கடந்த 22-ந்தேதி செந்தில்வேல் அறையில் இருந்த போது அவருக்கும், வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் செந்தில்வேலை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்வேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் செந்தில்வேல் இன்று பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி சந்திப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். செந்தில்வேலை அடித்து கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்தில்வேல் தங்கியிருந்த லாட்ஜின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    Next Story
    ×