search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு வந்த மலேசிய மண்- ஆன்லைனில் பதிவு செய்தால் வீடுகளுக்கு நேரடியாக வரும்
    X

    சென்னைக்கு வந்த மலேசிய மண்- ஆன்லைனில் பதிவு செய்தால் வீடுகளுக்கு நேரடியாக வரும்

    ஆன்-லைனில் மணல் வேண்டி புக் செய்தால் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக லாரிகள் மூலம் மணல் சப்ளை செய்யப்படும். #ForeignSand

    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டு பரிசீலனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

    பொதுப்பணித்துறை சார்பில் கடந்த மார்ச் 6-ந்தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரூ.548 கோடி மதிப்பில் 30 லட்சம் மெட்ரிக் டன் மணல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டது.

    இதற்கிடையே மலேசியாவின் பஹாய் மாநிலம் பீகான் துறைமுகத்தில் இருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணல் கப்பல் மூலம் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்துக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது.

    இந்த மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு கடந்த 20-ந்தேதி வர வேண்டியது. ஆனால் அரபிக்கடல் வங்காள விரிகுடா பகுதியில் கடல் சீற்றம் காரணமாக தாமதமாக இன்று வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கப்பலில் இருந்து மணல் இறக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

    மணல் இறக்க 4 அல்லது 5 நாட்கள் ஆகும் எனவும் மழை பெய்தால் கூட ஒரு சில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆன்-லைனில் மணல் வேண்டி புக் செய்தால் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக லாரிகள் மூலம் மணல் சப்ளை செய்யப்படும். மணல் வேண்டி புக் செய்யும் நபர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ‘ஓ.டி.பி.’ எண் அனுப்பப்படும்.

    அதை மணல் கொண்டு வருபவரிடம் சரியாக கூறினால் மட்டுமே மணல் சப்ளை செய்யப்படும்.


    இதனால் லாரிகளில் மணல் கடத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இந்த மணல் விற்பனையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மணல் தட்டுப்பாடு குறையும்.

    இதற்கிடையே ஏற்கனவே மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் நிறுவனம் ஒன்று மணலை இறக்குமதி செய்திருந்தது.

    அது குறித்து வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சமீபத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்தது.

    இதனைத் தொடர்ந்து தமிழக அரசு tnsand.in என்ற இணைய தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த மணலுக்காக, TNsand இணைய தளத்திலும், கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    துறைமுகத்தில் முதல் கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும்.

    சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுப்படி ஒரு யூனிட் (சுமார் 4.5 டன்) மணல் விலை ரூ.9,990 ஆகும். மேலும், 2 யூனிட்-ரூ.19,980, 3 யூனிட்- ரூ.29,970, 4 யூனிட்-ரூ.39,960, 5 யூனிட் ரூ.49,950 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ForeignSand

    Next Story
    ×