search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.5 அதிகரிப்பு - பயணிகள் அதிர்ச்சி
    X

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.5 அதிகரிப்பு - பயணிகள் அதிர்ச்சி

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சென்னையில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #PetrolDiesel #PetrolPriceHike
    சென்னை:

    சென்னை மாநகர மக்களின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது ‘ஷேர்’ ஆட்டோ பயணம். பொது போக்குவரத்து வசதி பல இருந்தாலும் உடனுக்குடன் சிறிது தூர பயணத்துக்கு சாதாரண, நடுத்தர மக்கள் ஷேர் ஆட்டோக்களையே நாடுகிறார்கள். சென்னை நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.



    பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே இருப்பதால் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்ந்து இருக்கிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக ரூ.10 ஆக இருந்த ஷேர் ஆட்டோ கட்டணம், தற்போது ரூ.15 ஆக உயர்ந்திருக்கிறது.

    அதேசமயம் இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் இருமடங்காக உள்ளதே... என்று வேதனைப்பட்டு வந்த பயணிகளுக்கு, இந்த ‘திடீர்’ கட்டண உயர்வு மேலும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து ‘ஷேர்’ ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறுகையில், “பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே வருமானம் அவ்வளவாக இல்லாத சூழ்நிலையில், தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எங்களை கவலையடையச் செய்துள்ளது. முன்பு தினசரி ரூ.1,000 வரை வருமானம் கிடைக்கும். தற்போது ரூ.400 வருமானம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. வேறு வழியின்றி முதற்கட்டமாக ரூ.5 கட்டணம் உயர்த்தி இருக்கிறோம். பெட்ரோல்-டீசல் விலை இன்னும் உயரும் பட்சத்தில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணமும் உயர வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.

    இதற்கிடையில் ‘ஆன்-லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் ஆட்டோ மற்றும் கால் டாக்சி கட்டணமும் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பிறகு ஆட்டோ டிரைவர்கள் ரூ.10 வரை கூடுதல் கட்டணத்தை கேட்டு பெறுகிறார்கள். சில டிரைவர்கள் பயணத்துக்கு முன்பே கூடுதல் கட்டணத்தை உறுதி செய்துகொள்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை இப்படியே உயர்ந்துகொண்டே சென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர். 
    Next Story
    ×