search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி மக்கள் மன்றம் 10 நாடுகளில் தொடக்கம்- நிர்வாகிகள் அறிவிப்பு
    X

    ரஜினி மக்கள் மன்றம் 10 நாடுகளில் தொடக்கம்- நிர்வாகிகள் அறிவிப்பு

    ரஜினி மக்கள் மன்றம் 10 நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் சில நாடுகளில் இந்த அமைப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இறுதியில் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இன்னமும் அவர் புதிய கட்சியை தொடங்கவில்லை.

    கட்சி தொடங்குவதற்கு முன்பு அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அவர் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார்.

    ரஜினி மக்கள் மன்றத்திற்கு நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்ட அதே நேரத்தில் வெளி நாடுகளிலும் இத்தகைய மன்றத்தை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி முதலில் அமெரிக்காவில் ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டன.

    இதைத் தொடர்ந்து கனடாவிலும் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த இரு நாடுகளிலும் ரஜினி மக்கள் மன்றத்தில் நிறைய தீவிர உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மூலம் இணைய தள தொடர்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மேலும் சில நாடுகளில் ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிடேட், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, கத்தார், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதுவரை 10 நாடுகளில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் சில நாடுகளில் இந்த அமைப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்த மன்றங்கள் சார்பில் சமீபத்தில் வாஷிங்டன், லண்டன், அபுதாபி, சார்ஜா உள்பட பல்வேறு நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்படும்போது வெளிநாடுகளில் இருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து ரஜினிக்கு பிரசாரம் செய்வது பற்றி இந்த கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
    Next Story
    ×