search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவராவை, குடோனுக்கு அழைத்து சென்று விசாரணை- லஞ்சம் வாங்கியவர்கள் சிக்குகிறார்கள்
    X

    மாதவராவை, குடோனுக்கு அழைத்து சென்று விசாரணை- லஞ்சம் வாங்கியவர்கள் சிக்குகிறார்கள்

    சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவை குடோனுக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதன் மூலம் குட்கா ஊழலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkaScam
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து செங்குன்றத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா குடோனில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.250 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அரசு துறை அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்பனை நடைபெற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. குடோனில் கைப்பற்றப்பட்ட டைரி மூலம் இது வெளிச்சத்துக்கு வந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஐகோர்ட்டு குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. கடந்த 3 மாதங்களாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழல் தொடர்பாக அதிரடி விசாரணை நடத்தினர்.

    கடந்த 5-ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குட்கா அதிபர் மாதவராவ், அவரது பங்குதாரர்களான சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களை போலீஸ் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 10-ந்தேதி காலை 11 மணி அளவில் 5 பேரும் ஐகோர்ட்டில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணையின் போது மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனை குட்கா வழக்கில் முக்கிய ஆதாரங்களாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

    2013-ம் ஆண்டு குட்காவுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டே செங்குன்றம் குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதன் பிறகுதான் குட்கா வியாபாரி மாதவராவிடம் போலீஸ் அதிகாரிகளும், அரசு துறை அதிகாரிகளும் பேரம் பேசி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட விசாரணையை சி.பி.ஐ. முடுக்கி விட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரியான செந்தில்முருகன் ஒவ்வொரு மாதமும் ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கி இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தனர். இவர் மட்டும் குட்கா ஊழலில் பல கோடிகளை சுருட்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    இந்த நிலையில் சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவை இன்று காலை 11.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வெளியில் அழைத்து வந்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரை காரில் ஏற்றி செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனுக்கு அழைத்து சென்றனர்.



    குட்கா ஊழலில் பணம் கைமாறியது குறித்து அங்கு வைத்தும் அவரிடம் விசாரணை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கிருந்து எல்லாம் செங்குன்றம் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் காரணமாக குட்கா விவகாரம் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. மாதவராவ் அளித்த வாக்குமூலத்தில் குட்கா ஊழலில் யார்-யாருக்கு தொடர்பு இருந்தது என்பது பற்றியும், ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக எத்தனை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்பது பற்றியும் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

    இதனை மையமாக வைத்தே சி.பி.ஐ. அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் குட்கா ஊழலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உணவு பாதுகாப்புதுறை அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் மாதவராவிடம் இருந்து வாங்கிய லஞ்சப்பணத்தை தங்களது உயர் அதிகாரிகள் யாருக்கும் பங்கு போட்டு கொடுத்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    இதில் அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலரும் விசாரணை வளைத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.

    இதன் மூலம் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் இன்னும் சில தினங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkaScam
    Next Story
    ×