search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டுக்கு செல்லும் உறவினர்களை அனுமதிக்க லஞ்சம்
    X

    தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டுக்கு செல்லும் உறவினர்களை அனுமதிக்க லஞ்சம்

    தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டுக்கு செல்லும் உறவினர்களை அனுமதிக்க தனியார் நிறுவன காவலாளிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. #Bribe

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ் இயங்கி வரும் ராசா மிராசுதார் மருத்துவ மனைக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    தஞ்சை நகரின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்ல இந்த மருத்துவமனை வசதியாக உள்ளது.

    இங்கு பிரசவ பிரிவு, கண், பல், குழந்தைகள் நலம் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு என தனி சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக ராசா மிராசுதார் மருத்துவமனை உள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.

    இங்கு அனைத்து வார்டுகளுக்கும் தனியார் நிறுவனத்தின் மூலம் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து முக்கியமான வார்டுகளுக்கும் ஒரு நாளுக்கு ஒரு காவலாளி வீதம் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் பிரசவ வார்டுகளில் பிரசவித்த பெண்களை பார்க்க செல்லும் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் ரூ.50 முதல் 200 வரை லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    இதுகுறித்து மருத்துவ மனைக்கு குழந்தையை பார்க்க வந்த சிலர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவ மனை தொடங்கிய நாள் முதலே குழந்தைகளுக்கு என்று தனி பிரிவுகள் உள்ளன. மேலும் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளதால் எளிதில் வந்து சிகிச்சை பெற்று செல்ல முடிகிறது.

    ஆனால் இங்கு தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் காவலாளிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஆஸ்பத்திரிக்கு பிறந்த குழந்தையை பார்க்க உறவினர்கள் மற்றும் குழந்தையின் தந்தை ஆகியோரை மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளே அனுமதிக்கின்றனர். இரவு நேரங்களில் ஒருவரையும் அனுமதிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் உள்ளே செல்வதற்கு ரூ.50 முதல் 200 வரை செக்யூரிட்டிகள் பணம் வாங்குகின்றனர். பணம் கொடுக்க மறுத்தால் தகாத வார்த்தையால் திட்டி உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் மற்றும் மருத்துமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×