search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு கடை வைக்க விரும்புவோர் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
    X

    பட்டாசு கடை வைக்க விரும்புவோர் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்புவோர் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பட்டாசு கடை வைப்பதற்கு வெடிமருந்து சட்ட விதிகளின்படி கடை உரிமையாளர்கள் அதற்கு உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதனுடன் ரூ.10-க்கு நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியும், உரிம கட்டணம் ரூ.500-ஐ கருவூலத்தில் அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியும், அசல் சலானுடன் வரைபடம் (5 நகல்கள்), வாடகை ஒப்பந்தப்பத்திரம், சொந்த கட்டிடம் எனில் வீட்டுவரி ரசீது ஆகியவற்றுடன் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் வெடிமருந்து விற்பனை செய்ய உள்ள கடை தரைதளத்தில் தான் இருக்க வேண்டும். இரண்டு கதவுகளும், அவசர வழியும் இருக்க வேண்டும். மேல் தளத்தில் குடியிருப்பு இருக்கக்கூடாது. படிக்கட்டு, லிப்ட் ஆகியவைக்கு அருகில் வெடிமருந்து விற்பனை செய்யக்கூடாது.

    ஒரு வேளை தீ விபத்து ஏற்பட்டால் அந்த இடத்திற்கு தீயணைப்பு லாரிகள் செல்ல கூடிய விசாலமான சாலையில் தான் பட்டாசு கடை இருக்க வேண்டும். பட்டாசு பொருட்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருளினால் அமைக்கப்பட்ட கூடாரம் அல்லது கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். இரண்டு பட்டாசு கடைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 10 மீட்டர் இருக்க வேண்டும்.

    வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு பிறகு பட்டாசு உரிமம் கேட்டு வரும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×