search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரியில் வாலிபர் திட்டியதால் கல்லூரி மாணவி தீக்குளித்து பலி
    X

    தருமபுரியில் வாலிபர் திட்டியதால் கல்லூரி மாணவி தீக்குளித்து பலி

    போலீசில் புகார் கொடுத்த ஆத்திரத்தில் வாலிபர் தாக்கி ஆபாசமாக திட்டியதால் மனவேதனையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி ஏ.ரெட்டி அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு வித்யாஸ்ரீ (வயது 21) என்ற மகள் உள்ளார். வித்யாஸ்ரீ தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வந்தார்.

    மாதையன் பக்கத்து வீட்டில் வசிபவர் ராஜேந்திரன். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு நந்தன் என்கிற நிர்மல் குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளை மதிகோண்பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். அவர் மதிகோண்பாளையத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாதையனும், ராஜேந்திரனும் அருகருகே வசித்து வருவதால் இரு குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். மாதையன் ஓசூருக்கு வேலைக்கு சென்றுவிடுவதால் அவரது வீட்டில் மனைவி லதா, மகள் வித்யாஸ்ரீ, அவரது பாட்டி உள்பட 3 பெண்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களிடம் ராஜேந்திரன் மகன் நந்தன் அடிக்கடி தங்களது நண்பர்களுடன் சென்று எங்களிடமே தகராறில் ஈடுபடுகிறார்களா? என்று கூறி மிரட்டி வேண்டுமென்றே தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    நேற்று மீண்டும் இருதரப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது நந்தன் மீண்டும் வீடு புகுந்து லதாவையும், வித்யாஸ்ரீயையும் மிரட்டினார். இதனால் பயந்துபோன லதா, அவரது மகள் வித்யாஸ்ரீ ஆகியோர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் இரு தரப்பினரையம் அழைத்து சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

    போலீசில் புகார் தெரிவித்தால் ஆத்திரத்தில் நந்தன் நேற்று மீண்டும் லதா வீட்டிற்குள் சென்று எங்கள் மீது நீ போலீசில் புகாரா கொடுக்கிறாய்? என்று கூறி லதாவையும், வித்யாஸ்ரீயையும் தாக்கி ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

    இதில் மனமுடைந்த வித்யாஸ்ரீ அருகே இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். தீ அவரது உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயில் கருகிய வித்யாஸ்ரீவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர்.

    வித்யாஸ்ரீக்கு உடலில் 90 சதவீதத்துக்கு மேல் கருகியதால் அவரிடம் நேற்று இரவு நடத்த சம்பவங்கள் குறித்து மாஜிஸ்திரேட்டு வாக்குமூலமாக பெற்றார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வித்யாஸ்ரீ இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    அப்போது அவரது உடலை பார்த்து தாய் லதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் ராஜேந்திரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வித்யாஸ்ரீ இறந்த தகவலை அறிந்த அவருடன் படிக்கும் மாணவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    வித்யாஸ்ரீயை ஆபாசமாக திட்டியும் தாக்கியதால்தான் அவர் மனமுடைந்து தீக்குளித்தார் என்பதால் இதற்கு காரணமான நந்தன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×