search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி சோபியா மீது புகார்- தமிழிசைக்கு தலைவர்கள் கண்டனம்
    X

    மாணவி சோபியா மீது புகார்- தமிழிசைக்கு தலைவர்கள் கண்டனம்

    தூத்துக்குடி மாணவி சோபியா மீது புகார் கூறிய பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #TamilisaiSoundararajan #Sophia
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கின்றேன். பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக.



    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

    தமிழிசையின் புகார் மீது அரசு அவசரம் அவசரமாக நடவடிக்கை எடுத்து, ஆராய்ச்சி படிப்பு முடித்து நாடு திரும்பும் ஓர் இளம்பெண்ணை இரவோடு இரவாக சிறையில் தள்ளி தங்கள் விசுவாசத்தை காட்டியிருக்கிறது.

    ஆனால், தமிழிசையின் தூண்டுதலின் பேரில் பா.ஜனதாவினர் தனது மகளை அவதூறாகப் பேசி அவமானப்படுத்தினார்கள், தனது மகள், மனைவி மற்றும் தனக்கு தமிழிசையே அத்தனைபேர் மத்தியிலும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று அவரது தந்தை கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-



    பா.ஜ.க.வை எதிர்த்து முழக்கமிட்ட ஒரே காரணத்தினால் மாணவி சோபியா கைது செய்யப்பட்டிருப்பது என்பது இந்த நாடு காலம் காலமாய் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக கொண்டிருக்கிற கருத்துரிமையின் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிற கொடும் தாக்குதலாக கருதுகிறேன்.

    முழக்கமிட்டால் கைதா? நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா? இங்கு நடப்பது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுகிறது. சகிப்புத்தன்மையற்று, எதிர் கருத்து எதுவும் தோன்றி விடக் கூடாது என்பதான ஏதேச்சதிகார உளவியல் என்பது பாஜக கட்சியின் அடிப்படை குணாதிசயங்களாக மாறி இருக்கின்றன என்பதற்கு இந்த கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இயக்குனர் பாரதிராஜா தனது குரலிலேயே பேசி ஒரு ஆடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ‘‘நீங்கள் தமிழக பி.ஜே.பியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். நாங்களெல்லாம், தேசிய சிந்தனையுடைய இலக்கிய வாதி குமரி அனந்தனின் மகள் என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் இதற்காகப் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

    பொது வாழ்வில் ஈடுபடும்போது எதையும் நீங்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் தகுதிக்கு அவரை அழைத்து உங்கள் பக்க நியாயங்களைக் கூறி சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?

    அதை விடுத்து அந்த வீரமுள்ள தமிழச்சி மீது புகார் கொடுத்து அவளைக் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்பது எவ்வளவு அநாகரிகமான வி‌ஷயம். உங்களை நான் குமரி அனந்தனின் பெண்ணாக நினைக்க முடியவில்லை.

    அந்தப் பெண்ணைப் பற்றி முறையிட்ட வழக்கை வாபஸ் பெற்றுவிட வேண்டும் இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது” என்று பேசியுள்ளார். #TamilisaiSoundararajan #Sophia
    Next Story
    ×