search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவியை ராகிங் செய்து வீடியோ எடுத்தது அம்பலம்
    X

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவியை ராகிங் செய்து வீடியோ எடுத்தது அம்பலம்

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவியை ராகிங் செய்து வீடியோ எடுத்த சக மாணவிகள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மாணவி தங்கி இருந்த விடுதியில் வார்டனர்களாக இருக்கும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இது தொடர்பாக, ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. பேராசிரியர்கள் பேசியதாக வெளியான ஆடியோக்கள் ‘குரல் மாதிரி’ சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    ‘குரல் மாதிரி’ சோதனை முடிவில் ஆடியோவில் பேசி இருப்பது பேராசிரியைகள் தான் என தெரியவந்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில், உதவி பேராசிரியர் சிக்காமல் இருக்க பேராசிரியைகளுக்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் முதலில் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஏனெனில் மாணவிகள் விடுதிக்குள் பேராசிரியர்கள், ஆண்கள் செல்ல அனுமதி கிடையாது. வேளாண்மை பல்கலை கழக விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. பேராசிரியரின் ‘லீலைகள்’ குறித்து மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் தான் முதலில் புகார் கூறியுள்ளார்.

    அப்போது, மாணவியை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி முதல்வர் ஈடுபட்டார். கல்லூரி பெயர் கெட்டு போய்விடும் என்பதால், கல்லூரி நிர்வாகம் மாணவியின் புகாரை மூடிமறைக்க திட்டமிட்டுள்ளது.

    கல்லூரி நிர்வாகத்தின் சமரசத்தை ஏற்று கொள்ளாத மாணவி, வெளிப்படையாக பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவிக்க போவதாக கூறினார். இதையடுத்து தான் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் மாணவியை சமரசப்படுத்த அனுப்பப்பட்டனர்.

    மாணவி கட்டளைக்கு அடிப்பணியாததால், ஆத்திரமடைந்த பேராசிரியைகள் 2 பேரும், மிரட்டியுள்ளனர். மாணவிக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்துள்ளனர். இதற்காக, விடுதியில் உள்ள சக மாணவிகள் 2 பேர் மூலம் மாணவியிடம் ‘ராகிங்’ செய்து சின்னசின்ன இடையூறுகளை ஏற்படுத்தினர்.

    இப்படி செய்வதால், உதவி பேராசிரியர் மீது புகார் அளிக்கவிடாமல் மாணவியை தடுக்க முடியும் என பேராசிரியைகள் நினைத்தனர். ஆனால், மாணவி ‘ராகிங்’ கொடுமைக்கு அஞ்சவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

    அதன்பிறகு, மாணவியை அதிகமாக டார்ச்சர் செய்தனர். விடுதியில் மாணவி தங்கியிருந்த அறையின் உள் தாழ்ப்பாள், வெளித் தாழ்பாள் உடைக்கப்பட்டது. மாணவியுடன் தங்கியிருந்த மற்ற மாணவிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    தனிமைப்படுத்தப்பட்ட மாணவி இரவில் அறையை பூட்டிக்கொண்டு தூங்க முடியாமல் தவித்தார். நள்ளிரவில் மாணவி தூங்கி கொண்டிருக்கும் வேளையில் தங்களுக்கு ஆதரவாக இருந்த 2 மாணவிகள் மூலம் பேராசிரியைகள் மாணவியை பல்வேறு கோணங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

    மாணவி வெளியிட்ட ஆடியோவில் பேராசிரியைகள் தங்களிடம் உன்னை பற்றிய ரகசியங்கள் உள்ளன. அதை வெளியிடுவோம் என்று மிரட்டியதும் இந்த போட்டோ, வீடியோக்களை வைத்து தான் என்று தெரிய வந்துள்ளது.

    வாணாபுரம் போலீசார் மாணவியை போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து பேராசிரியர்களுக்கு உடந்தையாக இருந்த மாணவிகள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரவில் தூங்கும்போது மட்டும் வீடியோ, போட்டோ எடுத்தனரா? அல்லது குளிக்கும் போது, உடைகளை மாற்றும் போது ரகசியமாக போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளனரா? என்று மாணவிகளிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.

    மேலும், விடுதியில் உள்ள மற்ற மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள், கல்லூரியை சுற்றி உள்ள கிராம மக்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனித உரிமை குழுவும் விசாரணை நடத்துவதற்காக திருவண்ணாமலைக்கு விரைவில் வருகின்றனர்.

    மாணவி பாலியல் புகாரில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக கூடும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×