என் மலர்
செய்திகள்

திருமங்கலத்தில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு- ரவுடி கைது
பேரையூர்:
திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் அடிக்கடி நகைபறிப்பு, வழிப்பறி போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது. பட்டப்பகலிலும் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் பெண்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர்.
மதுரை பைக்காரா முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் சக்திவேல் (வயது 32). இவர் நேற்று திருமங்கலம் மறவங்குளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மானாமதுரை ஏ.வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் பிரபு என்ற குட்டை கமல் (27) என்பவர் வழிமறித்தார். அவர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த பிரபுவை கைது செய்தனர். இவர் மீது பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






