search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் தலைவரானது பெருமையாக உள்ளது- பொதுக்குழுவில் கனிமொழி பேச்சு
    X

    மு.க.ஸ்டாலின் தலைவரானது பெருமையாக உள்ளது- பொதுக்குழுவில் கனிமொழி பேச்சு

    மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவரானது பெருமையாக உள்ளது என்று பொதுக்குழுவில் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #MKStalin #Kanimozhi #DMKThalaivarStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க. ஸ்டாலினை பொதுக்குழுவில் நிர்வாகிகள் மொத்தம் 18 பேர் வாழ்த்தி பேசினார்கள்.

    மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசும் போது கூறியதாவது:-

    இங்கு பேசியவர்கள் தளபதி தியாகத்தை பற்றி பேசினார்கள். கட்சி தலைமை பொறுப்பை அவர் ஏற்றதற்கு பாராட்டு தெரிவித்தார்கள்.

    கலைஞருக்கு பிறகு இந்த பேரியக்கத்தை வழிநடத்த தளபதிதான் இருப்பார் என்பதில் யாருக்கும் கிஞ்சித்தும் சந்தேகம் இருந்தது இல்லை. இன்று அவர் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டு இருப்பது ஒரு சடங்குதான்.

    அவர் நம் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. ஒவ்வொரு தொண்டனும், அடடா இவர்தான் என் தலைவர் என்று பெருமையோடு சொல்லும் அளவுக்கு தளபதியின் உழைப்பு அமைந்துள்ளது. அந்த தொண்டர்களுடன் நானும் பெருமைக் கொள்கிறேன்.

    காவிரி ஆஸ்பத்திரியில் கலைஞர் அனுமதிக்கப்பட்டபோது ஒருநாள் நலமாகவும், மற்றொரு நாள் உடல்நலம் குன்றி விட்டதாகவும் டாக்டர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு கலைஞர் உடல்நிலை இருந்தது.

    கலைஞருக்கு ஏதாவது ஆகிவிட்டால், அவரது ஒரே ஆசையான அண்ணா நினைவிடத்தில் கலைஞரையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை நிறைவேற்ற தளபதி முடிவு செய்தார். இதற்காக பலருடன் தளபதி பேசினார்.

    அந்த நேரத்தில் கூட அ.தி.மு.க. அரசு அவரை தத்தளிக்க விட்டதை அருகில் இருந்து பார்த்தவள் நான். முதல்-அமைச்சரை பார்த்து இதுதொடர்பாக கோரிக்கை வைத்தபோது, 1 மணி நேரத்தில் அதிகாரிகளுடன் பேசிவிட்டு கூறுவதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். ஆனால் 1 மணி நேரத்தில் அவர் பேசவில்லை.

    அதற்கு பதில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞருக்கு இடம் இல்லை என்று தலைமை செயலாளரிடம் இருந்து அறிக்கைதான் வந்தது. அது நமக்கு இடிபோல இருந்தது. நாங்கள் துடிதுடித்து போனோம்.

    மெரீனாவில் போய் தொண்டர்களுடன் சென்று உட்காரலாம் என்று நான் ஆவேசமாக கூறினேன். ஆனால் தளபதி அந்த சமயத்தில் ஆவேசப்படவில்லை. அமைதி காத்தார்.

    வக்கீல்களை அழைத்து பேசினார். நீதிமன்றத்தை நாடினார். அங்கு நீதி கிடைத்தது.


    கலைஞரை அண்ணா நினைவிடப் பகுதியில் அடக்கம் செய்யலாம் என்று தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை கேட்டதும் அந்த இடத்திலேயே தளபதி மனம் உடைந்து அழுதார்.

    இக்கட்டான நேரத்திலும் கூட அவர் கோபப்படவில்லை. நிதானமாக யோசித்து தனது செயல்பாட்டை காட்டினார்.

    அவர் மட்டும் கோபப்பட்டிருந்தால் லட்சோப லட்சம் தொண்டர்கள், இளைஞர்கள் திரண்டிருப்பார்கள். இந்த அரசால் அதை கட்டுப்படுத்தி இருக்க முடியாது. துப்பாக்கி சூடு நடந்திருக்கும். தளபதி கடமை, கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, அதை தவிர்த்தார்.

    கட்சியிலும் தளபதியாக செயல்பட்டு பிரதமரையே திருப்பி அனுப்பியவர், இன்று நமது தலைவராக நிமிர்ந்து நிற்கிறார். அவர் அன்று கோபப்பட்டிருந்தால் தமிழகமே அவர் பின்னால் அணிவகுத்து வந்து இருக்கும்.

    மெரீனாவில் மறியல் நடந்து இருந்தால் என்னவெல்லாமோ நடந்து இருக்கும். ஏனென்றால் இந்த அரசுக்கு மனசாட்சி இல்லை. அந்த நிலையில் மற்றவர்கள் கஷ்டப்படுவதை தளபதி விரும்பவில்லை.

    எனவே தமிழகத்தை தலைநிமிர்ந்து நடத்த எழுந்து வா தலைவா, எங்களை வழிநடத்து என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #MKStalin #Kanimozhi  #DMKThalaivarStalin
    Next Story
    ×