search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது - தமிழகத்தில் இருந்து ஒரு ஆசிரியர் மட்டும் தேர்வு
    X

    கோவை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது - தமிழகத்தில் இருந்து ஒரு ஆசிரியர் மட்டும் தேர்வு

    மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையை சேர்ந்த ஸதி தேர்வாகியுள்ளார். #NationalTeachersAward
    கோவை:

    மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த தலைமை ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    அதன்படி இந்த விருதுக்கு கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஆர்.ஸதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-

    நான் மலுமிச்சம்பட்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக வந்தபோது 146 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்ததால் தற்போது 270 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் படித்து வருகின்றனர்.

    எங்கள் பகுதி பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக பள்ளியில் சிறந்த 6 மாணவ- மாணவிகளை தேர்வு செய்து ‘குட்டி கமாண்டோ’ என்ற அமைப்பை உருவாக்கினேன். கடந்த கல்வி ஆண்டு முதல் டேப்லெட் (கையடக்க கணினி) மூலம் மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்கு பரிசாக இந்த விருதுக்கு நான் தேர்வாகி உள்ளதாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×