search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்த தடை - சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்
    X

    8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்த தடை - சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்

    8 வழிச்சாலை தொடர்பாக மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சேலத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டினர்.
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7,500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மேலும் வனப்பகுதி, பள்ளி கூடங்கள் பல ஆயிரம் வீடுகள், கோவில்கள் இடிக்கப்பட உள்ளன.

    இதற்கான நில அளவீடு நடந்த போது பாதிக்கப்படும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ததுடன் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணிகள் நடைபெற்றது.

    இதற்கிடையே தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். மேலும் வழக்கு விசாரணை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறினர். இதனை அறிந்த சேலம், தர்மபுரி உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தீர்ப்பை வரவேற்றனர்.

    சேலம் மாவட்டத்தில் 36 கி.மீ. தூரத்திற்கு 8 வழி சாலை அமைக்க நிலம் அளவீடு முடிக்கப்பட்டு முட்டுக்கல் நடப்பட்டது. நேற்று தீர்ப்பு வெளியானவுடன் சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் 100-க்கும் மேபட்டோர் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்தில் திரண்டனர்.

    அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சேலம் வாழப்பாடி அருகே உள்ள குப்பனூர், குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்காபுரம் பகுதியில் பாதிக்கப்படும் மக்கள் கோவில்களில் திரண்டு கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

    இது குறித்து விவாசாயிகள் கூறுகையில், பல தலைமுறைகளாக எங்களிடம் இருந்த ஒரே வாழ்வாதாரமான நிலத்தை போலீஸ் உதவியுடன் பறிக்கும் முயற்சியில் அரசு இறங்கியது. தற்போது நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு ஒரு தற்காலிக நிவாரணியாக உள்ளது. எங்கள் வேதனைக்கு தீர்வு காணும் வகையில் 8 வழி சாலை திட்டத்திற்கு கோர்ட் நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×