search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயம் - நீர் ஆதாரத்தை சேமிக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்
    X

    விவசாயம் - நீர் ஆதாரத்தை சேமிக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

    மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் விவசாயம் மற்றும் நீர் ஆதாரத்தை சேமிக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    கோவை:

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டமாக கோவை சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு கோவை மாநகர் தெற்கு மாவட்டத்தலைவர் வி.வி.வாசன் தலைமை தாங்கி பேசினார். கோவை மாநகர் வடக்கு மாவட்டத்தலைவர் கே.என்.ஜவஹர் வரவேற்று பேசினார். கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தலைவர் அன்னூர் ராமலிங்கம், புறநகர் தெற்கு மாவட்டத்தலைவர் பி.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.

    கூட்டத்தில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

    விவசாய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்த ஜி.கே.மூப்பனார் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் அகில இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்து வளர்ந்து, உயர்ந்து விளங்கியதற்கு அடிப்படையாக இருந்தது அவர் பிறந்த விவசாய மண், காவிரி மண். அந்த வகையில் தமிழ்மாநில காங்கிரஸ் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும் கட்சி.

    இனிமேல் காவிரியின் குறுக்கே தடுப்புச்சுவர் அமைத்தால் மட்டுமே பாசன கால்வாய்களில் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது கால்வாய்களின் கடைக்கோடிக்கு சென்றடையவில்லை. மேட்டூர் அணைக்கு கீழே காவிரியின் குறுக்கே தேவையான தடுப்பணைகளை கட்டியிருக்க வேண்டும். இனிமேலாவது தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் முறைப்படி காலத்தே கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    கேரளாவில் மழை, வெள்ளக்காலங்களில் ஆறுகளில் இருந்து பல நூறு டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இவற்றை தமிழக பகுதிகளில் திருப்பி விடும் திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்திற்கு பாசன நீர், கேரளாவிற்கு மின்சாரம் என்ற அடிப்படையில் நீர் பங்கீடு செய்திட வேண்டும்.

    மத்திய-மாநில பட்ஜெட்டுகளில் எதிர் காலங்களில் விவசாயத்திற்கும், நீர் ஆதாரத்தை சேமிப்பதற்கும், அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாய தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும்.

    நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அமராவதி அணையின் நீர் கொள்ளளவை 4 டி.எம்.சி.யில் இருந்து 9 டி.எம்.சி.யாக அதிகரிக்க வேண்டும். அவினாசி-அத்திக்கடவு பாசன திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.

    விவசாயிகளின் விளை பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. விலை குறையும் போது அதை ஈடுகட்டும் வகையில் விலை பாதுகாப்பு காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். எனவே தமிழகத்தில் இனி நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில், யாரும் வெற்றி பெற முடியாது என்ற நிலையை நாம் ஏற்படுத்துவோம். இதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.பி. பி.எஸ்.ஞானதேசிகன், மாநில துணைத்தலைவர் கோவை தங்கம், குனியமுத்தூர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், ஈரோடு ஆறுமுகம், சுரேஷ் மூப்பனார், சக்திவடிவேல், யுவராஜா, மாறன், கோபால், கவுதமன், மாநில செயலாளர்கள் சேதுபதி, செல்வராஜ், தொழிற்சங்க செயலாளர் தனசேகரன், இளைஞரணி செயலாளர் நடராஜ், துணை தலைவர்கள் சிவசுப்பிரமணியம், செழியன், பொதுச்செயலாளர்கள் பத்மநாபன், அப்துல் கலாம் அசாத், பெரியசாமி, மற்றும் முருகேஷ், தங்கராஜ், திருப்பூர் மாநகர் மாவட்டத்தலைவர் எஸ். ரவிக்குமார், மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், திருப்பூர் தெற்கு புறநகர் மாவட்டத் தலைவர் டி.ரத்தினவேல், நீலகிரி மாவட்டத்தலைவர் சந்திரன் மற்றும் தம்பு, இளைஞர் அணி துணை தலைவர் சி.பி.அருண்பிரகாஷ், கோவை விஷ்ணு, சரத் விக்னேஷ், பொன் ஆனந்தகுமார், சி.ஆர்.ரவிச்சந்திரன், குனிசை ரவிச்சந்திரன் ராம்நகர் சக்தி முருகானந்தம், ராஜா, ராஜேஷ், மாவட்ட பொருளாளர் வளர்மதி கணேசன், காளப்பட்டி சிகாமணி, நித்யானந்தம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மழை-வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் 30 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை ஜி.கே.வாசன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
    Next Story
    ×