search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டத்தில் கடைமடை வரை பாய்ந்து கடலில் கலந்த காவிரி தண்ணீர்
    X

    டெல்டா மாவட்டத்தில் கடைமடை வரை பாய்ந்து கடலில் கலந்த காவிரி தண்ணீர்

    டெல்டா மாவட்டத்தில் கடைமடை வரை பாய்ந்து வந்த காவிரி ஆறு, இன்று காலை பூம்புகார் கடலில் கலந்தது. #cauvery

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கடந்த 22-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப் படி கல்லணையில் இருந்து 29807 கன அடி வீதம் வினாடிக்கு திறந்து விடப்படுகிறது. இதில் காவிரிக்கு 9512 கன அடியும், வெண்ணாற்றில் 9507 கன அடியும், கல்லணை கால்வாயில் 501 கன அடியும் , கொள்ளிடத்தில் 10, 287 கன அடியும் திறந்து விடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை அடுத்த கல்விபாயன்பேட்டையில் கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று கல்லணை கால்வாயிலில் தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது 501 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

    தற்போது டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் கடைமடை வரை சென்று விட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் செல்ல வில்லை.இதனால் டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து இன்று காலை பாசனத்துக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இங்கிருந்து வெண்ணாற்றுக்கு 2032 கன அடியும், கோரையாற்றில் 2406 கன அடியும் பாமினி ஆற்றில் 654 கன அடியும் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுமார் 7½ லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திருவாரூர் பாண்டவையாறில் முசிறியம் படுகையணையில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை. காவனூர் பகுதியில் தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் காவிரி ஆற்று தண்ணீர் சீர்காழியை அடுத்த மேலையூர் கதவணைக்கு இன்று காலை வந்தது. இதையொட்டி அப்பகுதி விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். தற்போது கொள்ளிடத்தில் அதிகப்படியான தண்ணீர் 10287 கன அடி திறப்பதால் கடலில் சென்று வீணாகுகிறது.

    சீர்காழியை அடுத்த பழையாறு பகுதியில் கொள்ளிடம் ஆற்று தண்ணீர் நேற்று முதலே கலந்து வருகிறது. அதே நேரத்தில் நாகை மாவட்டத்தில் இன்னும் ஒரு சில கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேர வில்லை. இதற்கிடையே கடைமடை வரை பாய்ந்து வந்த காவிரி ஆறு, இன்று காலை பூம்புகார் கடலில் கலந்தது. காவிரி கடலில் சங்கமிப்பதை அப்பகுதி மக்கள் பார்வையிட்டனர். #cauvery

    Next Story
    ×