search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி தலைமை செயலகம் முற்றுகை - போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
    X

    கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி தலைமை செயலகம் முற்றுகை - போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
    சென்னை

    மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்துடன் மத்திய அரசு கொண்டு வர உள்ள சாலை பாதுகாப்பு மசோதாவை கண்டித்து அகில இந்திய போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 7-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கூட்டமைப்பில் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்பட கட்சிகளை சேர்ந்த 10 தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த விளக்க கூட்டம் சென்னை பல்லவன் இல்லம் அருகே நேற்று நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவரும், தொ.மு.ச. பொதுச்செயலாளருமான சண்முகம் தலைமையில், பொருளாளர் நடராஜன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் பேசியதாவது:-

    மத்திய அரசின் சாலை பாதுகாப்பு மசோதாவில் பஸ் நடத்துனர் லைசென்சு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும் நடத்துனர் இல்லாத பஸ்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு மசோதாவில் போக்குவரத்து தொழிலை நசுக்கும் பல்வேறு அபாயங்கள் உள்ளது. எனவே நாடு முழுவதும் ஆகஸ்டு 7-ந்தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும்.

    மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×