search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
    X

    விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஷேர் ஆட்டோக்கள் விழுப்புரம் கோர்ட்டு முன்புறம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    மேலும் விழுப்புரம் நேருஜி சாலையில் மாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை சாலையின் வலதுபுறமும், அடுத்த 15 நாட்கள் சாலையின் இடதுபுறமாகவும் சுழற்சி முறையில் இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று காலை விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் அதிரடியாக அகற்றினர்.

    அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையோரமாக இருந்த பழக்கடைகள், காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள், கடைகளின் விளம்பர பலகைகள் ஆகியவற்றை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். 
    Next Story
    ×