search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய 3 மாணவர்கள் கைது
    X

    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய 3 மாணவர்கள் கைது

    மணவாளக்குறிச்சி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவி கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிச்சந்தை செதுவூரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் குளச்சல் பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    விக்னேஷ், அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி. படிக்கும் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்தார். அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அந்த மாணவி விக்னேசின் காதலை ஏற்காமல் அவரை புறக்கணித்தார். இதனால் விக்னேஷ், அந்த மாணவியை பின்தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலையில் கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக அந்த மாணவி, தனது தோழியுடன் கருமன்கூடல் பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றார். அப்போது விக்னேஷ், தன்னுடன் படிக்கும் மாணவர்களான கழுவன்திட்டவிளையைச் சேர்ந்த ஸ்ரீசுதன் (22), ஆரோக்கியபுரம் ராஜசிங் (20) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினார்.

    3 பேரும் அந்த மாணவியை கேலி செய்து பேசினர். அந்த மாணவி அவர்களை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த 3 மாணவர்களும், மாணவியிடம் அத்துமீறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். மேலும் தங்களுக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது, செத்துப்போ என கூறி மாணவியை அவர்கள் 3 பேரும் தாக்கினர். இதில் அந்த மாணவியின் மார்பில் பலத்த அடிபட்டு கீழே சரிந்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் வடிந்து அவர் பேச்சு மூச்சற்ற நிலையில் மயங்கினார்.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் 3 மாணவர்களும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். மயங்கி கிடந்த மாணவியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த மாணவி தொடர்ந்து கோமா நிலையிலேயே உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் விக்னேஷ், ஸ்ரீசுதன், ராஜசிங் ஆகியோரை கைது செய்தனர். அவர்களில் ராஜசிங் ஜெயிலில் அடைக்கப்பட்டார். விக்னேஷ், ஸ்ரீசுதன் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

    இதற்கிடையே மாணவியை தாக்கியபோது அவருடன் நின்ற தோழி, மாணவர்களை தடுக்க முயன்றார். அப்போது தோழியையும் மாணவர்கள் தாக்கினர். இதன் காரணமாக ஏற்பட்ட காயத்தால் தோழியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

    Next Story
    ×