search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்களுடன் குடி மகன்கள் வாக்குவாதம்
    X

    டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்களுடன் குடி மகன்கள் வாக்குவாதம்

    தாராபுரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட கோரி பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கும் குடிமகன்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தளவாய்பட்டணம் உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.

    இக்கிராமத்தில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோர்ட்டு உத்தரவிட்ட போது தளவாய் பட்டணம் கடை மூடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று அங்கு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் 120-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.

    இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. மதுக்கடை திறந்தால் மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்கள். மேலும் இக்கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்கள் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து விடுவார்கள்.

    எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்ககூடாது என போராட்டம் நடத்தினார்கள். இதனை அறிந்த குடிமகன்கள் அங்கு வந்தனர். அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என கூறினர். இதனால் குடிமகன்களுக்கும்- போராட்டம் நடத்திய பெண்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இது குறித்து குடிமகன்கள் கூறியதாவது-

    நாங்கள் விவசாய வேலை செய்து வருகிறோம். உள்ளூரில் டாஸ்மாக் கடை இல்லாததால் தாராபுரம் அல்லது காரத் தொழுவு, சந்தராபுரம் கிராமங்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மது அருந்தி வந்தோம்.

    அவ்வாறு மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பியவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் உயிர் இழந்து உள்ளனர்.

    மேலும் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டி வரும் அனைவரையும் டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தூரத்திலே போலீசார் வழி மறித்து பிடித்து விடுகின்றனர்.

    இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க தான் இப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என கூறுகிறோம். இந்த கடை யாருக்கும் இடையூறு இல்லாம்ல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கும் இடத்தில் தான் உள்ளது.

    இதில் யார் தலையிட்டாலும் கடையை மூட விடமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பெண்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடை மாலை 6 மணிக்கு மேல் திறக்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×