search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளச்சலில் பயங்கர கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
    X

    குளச்சலில் பயங்கர கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    குளச்சல் கடலில் காணப்பட்ட கடல் சீற்றம் காரணமாக அதிகாலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.
    குளச்சல்:

    குமரி மேற்கு மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளன.

    படகுகள் கடலுக்கு செல்லாவிட்டாலும் இங்கிருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளங்கள், கட்டுமரங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

    கட்டுமரங்களில் செல்லும் மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு செல்வார்கள். ஆனால் இன்று காலையில் குளச்சல் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் காணப்பட்டது. கொட்டில் பாடு, கோடிமுனை, குறும்பனை, வாணியக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டது.

    கடல் சீற்றம் காரணமாக அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்தன. மேலும் அலை தடுப்பு சுவரையும் தாண்டி அலைகள் வீசியது.

    இது போல குளச்சல் பகுதியில் கடலுக்குள் உள்ள பாலத்தின் மேற்புற சுவரையும் தாண்டி அலைகள் ஆக்ரோ‌ஷமாக எழுந்தது. அதோடு கடல் அரிப்பும் காணப்பட்டது.

    இதன் காரணமாக கடற்கரையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட மணல் மேடுகள் அலையால் இழுத்து செல்லப்பட்டு மாயமானது. மேலும் கடல் அலைகளால் தூண்டில் வளைவுகளும் சேதமானது.

    குளச்சல் கடலில் காணப்பட்ட கடல் சீற்றம் காரணமாக அதிகாலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். மேலும் அவர்கள் தங்களின் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    அதிகாலையில் சென்றவர்களை தவிர மற்ற மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்தனர். இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்தது.

    குளச்சல் மீன் மார்க்கெட்டிற்கு அதிகாலையிலேயே உள்ளூர் வியாபாரிகள் பலரும் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் பிடித்து வரும் மீன்களை வாங்க வருவார்கள். இன்று கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு பெரும்பாலான மீனவர்கள் செல்லாததால் மார்க்கெட்டில் போதுமான மீன்கள் விற்பனைக்கு வரவில்லை.

    இதனால் மீன் மார்க்கெட் களையிழந்து காணப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு நெத்திலி மீன்கள் அதிகமாக பிடித்து வரப்பட்டது. ஆனால் இன்று மீன்கள் இன்றி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
    Next Story
    ×