search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற புதிய செயலி- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
    X

    சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற புதிய செயலி- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    வீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறும் வகையிலான புதிய செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #EdappadiPalanisamy #AIADMK
    சென்னை:

    வீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறும் வகையிலான புதிய செயலியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு உயர் வரையறை தரத்தில் மிக துல்லியமான சேவை ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்’ வாயிலாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்கள்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 சந்தாதாரர்களுக்கு ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்களை’ வழங்கினார். அத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ‘எச்.டி.’ டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையையும் தொடங்கி வைத்தார்.

    தற்போது ‘எஸ்.டி செட்டாப் பாக்ஸ்கள்’ விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ‘எச்.டி’ ஒளிபரப்பு சேவை உயர்சந்தை தேவையை பூர்த்தி செய்வதால், இச்சேவையை விரும்பும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் ‘எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள்’ குறைந்த விலையான ரூ.500-க்கு உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக வழங்கப்படும். மேலும், தற்போது தொடங்கப்பட்டுள்ள எச்.டி. ஒளிபரப்பு சேவையில், மூன்றாவது தொகுப்பாக 380 ‘எஸ்.டி.’ சேனல்களுடன், 45 ‘எச்.டி.’ சேனல்களும் சேர்த்து மொத்தம் 425 சேனல்கள் ரூ.225 மற்றும் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து மாத கட்டணத்தில் வசூலிக்கப்படும்.

    இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும், தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் புதிய செல்போன் செயலி தேசிய அளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு துறைகள் முதல் உள்ளாட்சி துறைகள் வரை நாடு முழுவதும் மின் ஆளுமை மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகளை ஒரே தரவுதளத்தின் கீழ் இந்த செயலி வழங்கும்.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் மின்மாவட்ட திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, வருவாய் துறையை சேர்ந்த 3 சேவைகளான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிட சான்றிதழ் ஆகியவை ( UM-A-NG ) செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, 24 மணி நேரம் வீட்டில் இருந்தபடியே சான்றிதழ்களை பெற முடியும்.

    பொதுமக்களுக்கான அரசு துறைகளின் 63 சேவைகள் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுசேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இங்கு கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில், சேவைகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் எளிதில் விண்ணப்பித்து பெற முடியும். ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் www.tnsev-ai.tn.gov.in/cit-iz-en என்ற திறந்தநிலை சேவைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வருவாய் துறையின் 20 சான்றிதழ் சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த பொதுமக்களுக்கான திறந்தநிலை சேவை தளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #EdappadiPalanisamy #AIADMK
    Next Story
    ×