search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வித்துறையை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி - வைகோ குற்றச்சாட்டு
    X

    கல்வித்துறையை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி - வைகோ குற்றச்சாட்டு

    கல்வித்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக மத்திய அரசு உயர் கல்வி ஆணையம் அமைக்க முயற்சிப்பதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடாளுமன்றத்தில் 1956-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கவும், கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நோக்கங்களாக வரையறுக்கப்பட்டது கடந்த 60 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு, ‘உயர்கல்வி ஆணையம்’ அமைப்பதற்கு சட்ட முன்வடிவு ஒன்றை பொதுமக்கள் கருத்தறிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    உயர்கல்வித் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, தனியாரைச் சார்ந்து இயங்கும் நிலையை ஏற்படுத்தி, உயர்கல்வியை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் பெரிதும் ஆபத்தானவை. கண்டனத்திற்கு உரியது.



    உயர்கல்வி ஆணையம், ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்புகளை உருவாக்கி, மாநில அரசுகளின் அதிகாரத்தை முழுமையாக பறித்துவிட்டு மத்திய அரசே கல்வித் துறையில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்த பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறது.

    உயர்கல்வித் துறையைத் தனியாரிடம் தாரை வார்க்கும் வகையிலும் மாநில அரசுகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையிலும் உயர்கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகளின் பொது அதிகாரப் பட்டியலில் இருந்து கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×