என் மலர்
செய்திகள்

கும்பகோணம் அருகே மணல் லாரி மோதி சிறுவன் பலி
சுவாமிமலை:
கும்பகோணம கள்ள தெருவைச் சேர்ந்த சுகுமார்-வனிதா ஆகியோரின் மகன் கிஷோர் (வயது 6) இவர் தேவனாஞ்சேரியில் உள்ள பாட்டி சித்ரா வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சித்ரா ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க மொபட்டில் கடிச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அவருடன் கிஷோரும் சென்றான். அவர்கள் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளி கொண்டு பின்னால் வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் கிஷோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சித்ரா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல் லாரி மோதி சிறுவன் பலியானதை அறிந்த பொதுமக்கள் லாரி கண்ணாடியை உடைத்து கும்பகோணம்- தேவனாஞ்சேரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்பகோணம் அருகில் மணல் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






