search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு விவசாயிகள் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆதரவு
    X

    பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு விவசாயிகள் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆதரவு

    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலையை எதிர்ப்பது தொடர்பாக விவசாயிகள் சங்கம் அறிவித்த கறுப்பு கொடி போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்துள்ளது. #GreenWayRoad
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமை வழிச் சாலை என்ற பெயரில புதிதாக ஒரு சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    சாலைக்காக விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் உட்பட இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

    ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளை இழந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், அரசு போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவி மிரட்டுவது, அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சட்டவிரோத அணுகு முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாளை (26-ந் தேதி) காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்திலிருந்து சென்னை வரையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழி சாலைத் திட்டம் ஒன்றை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த முற்பட்டுள்ளன. இதனால் ஐந்து மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளை நிலங்களும் குடியிருப்புகளும் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்படுபவர்களின் கருத்தை அறியாமலும், ஒப்புதலை பெறாமலும், பயமுறுத்தி பலவந்தப்படுத்தி நிலங்களைப் பறிப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கிறது. மறுப்பு தெரிவிக்கும் மக்களை பொய் வழக்கு போட்டு கைது செய்கிறது. இந்த அடக்குமுறையைக் கண்டித்தும் நிலப்பறிப்பை எதிர்த்தும் 5 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி அறவழியில் போராடுவதென்று முடிவு செய்துள்ளனர். நாளை (26-ந்தேதி) நடைபெறும் இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GreenWayRoad
    Next Story
    ×