search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுமை வழிச்சாலையால் 5 மாவட்டங்கள் பயன்பெறும்- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    பசுமை வழிச்சாலையால் 5 மாவட்டங்கள் பயன்பெறும்- தமிழிசை சவுந்தரராஜன்

    சென்னையில் இருந்து சேலத்துக்கு அமைய இருக்கும் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன்பெறும் என தமிழிசை சவுந்தரராஜன் கூரியுள்ளார். #Greenwayroad #TamilisaiSoundararajan
    வேலூர்:

    மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூரில் நடந்தது. கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் நேர்மறை அரசியல் வேண்டும். அதை பா.ஜ.க.வால் மட்டும் கொடுக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டில் எதிர்மறை அரசியல் தலைத்தூக்கிக் கொண்டிருக்கிறது.

    பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் அதிகப்படியாக தமிழகத்துக்குத் தான் ரூ.2 ஆயிரத்து 600 கோடி வழங்கப்பட்டுள்ளது. மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபிறகு 24 சதவீதம் பால் உற்பத்தி அதிகரித்து வெண்மைப் புரட்சி ஏற்பட்டுள்ளது.

    இன்று புதிது புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல்வாதி கமல்ஹாசன், இன்று (நேற்று) ராகுல்காந்தியை சந்தித்துள்ளார். அவரிடம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி கேட்டு தெரிந்து கொண்டதாக ராகுல்காந்தி கூறியிருக்கிறார். அப்படியென்றால் திருநாவுக்கரசர் தகுதியற்றவரா?

    தமிழர்கள் சுகாதாரமாக வாழ பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளார். ஆனால் எந்த வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது எனச் சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். 8 வழி பசுமைச்சாலை வந்தால் சென்னையில் இருந்து சேலத்துக்குச் செல்ல 3 மணிநேரம் தான் ஆகும். அந்தப் பாதை வரும் வழியெல்லாம் வளர்ச்சிப் பெறும். விவசாயம் பாதிக்கும் என்றால் அந்தத் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்லாது.

    10 வருடத்துக்கு முன்பு சென்னையில் இருந்து வேலூருக்கு வருவதற்கு 4 மணிநேரம் ஆனது. வாஜ்பாய் கொண்டு வந்த திட்டத்தால் இன்று 2 மணிநேரத்தில் வந்து விடுகிறோம். 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன்பெறும். ஆனால் சுயநலத்துக்காக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.



    வளர்ச்சியை தடுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் குழப்பம் விளைவிப்பவர்கள் கைது செய்யப்பட வேண்டும். நாம் எப்போதும் கற்பூரத்தை எரித்துதான் எதையும் தொடங்குவோம். ஆனால் வைகோ தனது தொண்டரை எரித்துதான் தொடங்குவார்.

    மோடியை எதிர்க்க அனைவரும் ஒன்று சேருகிறார்கள். முயல்கூட்டம் ஒன்றுசேர்ந்து சிங்கத்தை வெற்றிபெற முடியாது.

    இந்தியாவில் 22 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்து 65 சதவீதம் காவிமயமாகி விட்டது. கர்நாடகாவிலும் விரைவில் ஆட்சி கவிழும். அங்கும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிக்க முடியாது என குமாரசாமி கூறுகிறார். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வரும் திராணி தி.மு.க.விற்கு உண்டா?. தமிழ்நாட்டில் தேர்தல் வந்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது. தற்போது தமிழகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தி.மு.க.தான் காரணம்.

    சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. பெண்கள் சினிமாக்காரர்களை நம்பமாட்டார்கள்.

    அது, அம்மாவோடு முடிந்து விட்டது. இனி தமிழ்நாட்டுக்கு மோடி தான் அம்மா. சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் நக்சலைட்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வெகுவிரைவில் காவிக்கொடி பறக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Greenwayroad #TamilisaiSoundararajan
    Next Story
    ×